Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக

மர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக

இஃது அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் (பெரிய ஆலிம்) அவர்கள் நினைவாக 13-10-1978 வெள்ளி பி.ப காத்தான்குடி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் மத்றஸஹ்வில் நடைபெற்ற நினைவு கூறல் கூட்டத்தின் போது பாவலர் சாந்தி முஹ்யித்தீன் JP
அவர்கள் வாசித்த இரங்கற்பா.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

விரிந்த மனம் மலர்ந்த முகம் அடர்ந்த தாடி –
வித்தகத்தைக் காட்டுகின்ற ஞானப் பார்வை
பரந்துயர்ந்த நுதலுடனே பழுதில்லாத – ஒரு
பனம் பழத்தை கவிழ்தாற் போல் தலையின் தோற்றம்!
மெல்லிய நல் மடற்காது உயர்ந்த மூக்கு
மேலான செவிப் பறைகள் வெள்ளைத் தொப்பி
நல்லதொரு நீள்சட்டை உள்ளே பெனியன்
நலமான இடுப்புக்கு பச்சை பெல்ட்டு.
சொல்லரிய வலக்கரத்தில் குடையிருக்கும்!
தோலுக்கு மேலாலோர் ஹாஜிச் சால்வை!
நல்ல அறைச் சாரத்தை உயர்த்திக் கட்டி- ஜவாதப்பா!
நடக்கின்ற நடையழகு தனியழகு!
நடக்கையிலும் முகம் சற்றுக் கவிழ்ந்திருக்கும்!
நலமான கல்பதனை முகக் கண் நோக்கும்!
அடக்கமுள்ள ஜவாதப்பா நிமிர்ந்து பார்த்தால்
அஞ்சாத இளைஞருக்கும் நெஞ்சிடிக்கும்!
தற்பனை யெப்பொழுதும் மறந்திடாதார்!
தற்பெருமை பேசுதற்கு துணிந்திடாதார்!
மற்றவரின் ஐபுகளைக் கெண்டிப்பார்க்க –
மனத்தாலும் நினையாதார் எங்களப்பா!
பேசுதற்குப் பெரியாலிம் எழுந்து விட்டால்
பெருவானின் இடி முழக்கம் இங்கே கேட்கும்!
ஓசை மிகும் வெண்கலத்தின் ஒலியும் கேட்கும்!
ஓங்காரச் சிங்கத்தின் ஓசை கேட்கும்.
கடல் மடைகள் திறந்தாற் போல் “ஹகாயிக்” கென்னும்
கடல் நடுவில் பெரியாலிம் சென்று நின்று
மடமடனத் தான் சொரியும் இறையின்பத்தில்
மாய்ந்திடுவர் மக்களெல்லாம் மதிமறப்பர்.
பெரியாலிம் பேசையிலே புல்லரிக்கும்!
பெரியதொரு சப்தம் வர நெஞ்சிடிக்கும்!
அரிதான உரை கேட்க கண்ணீர் மல்கும்!
அறிவாளர் திருமுகத்தை என்று காண்போம்.!
எல்லைக்கு மேலால்தான் சென்று விட்டால்
இடையினிலே தான் பேச்சை நிறுத்திக் கொண்டு
கைவிசிறியால் அடித்து மேசை மீது- நிலை
கடந்து விட்டோம் இனி விடுவோம் என்பார் ஆலிம்.!
சரிகையிலும், கிரிகையிலும் யோக ஞான
சக்தியிலும் தான் திழைத்த காரணத்தால்
உரியவர்க்கு உடையதையே கூறிவந்த – அந்த
உத்தமரை இனியெங்கே காண்போம்!
குறைகுடங்கள் ஒரு நூறு இணைந்து கொண்டு
குதித்தாலும் நிறை குடமாய் ஆகுமா? சொல்
இறையுணர்வில் திழைத்த பெரியாலிமுக்கு
இவ்வூரில் ஒருத்தருமே சமனாகாரே!
ஆலிமாய் வெளியான காலந் தொட்டு
அண்மையிலே மரணிக்கும் நேரமட்டும்
தீனுக்காய் வாழ்ந்தார்கள் நொடிப் பொழுதும்
வீணாகக் கழித்தறியார் எங்கள் ஆலிம்.!
தங்களது உஸ்தாதுனா அவர்கள்
தமக்கழித்த இறுதியுரை சென்னியேற்று
இறுதிவரை மத்ரஸா தமக்காய் வாழ்ந்த
இனியதொரு பெருமகனார் பெரிய ஆலிம்.
உயிருக்கு உயிராக பதுரியாவை-
உயிரினிக்கும் மேலாக மத்றஸாவை
பயிருக்கு நீர் போலப் பேணிக்காத்த
பண்பாளர் கபுறுக்குள் மறைந்து கொண்டார்.
மெய்ஞான வழிவந்த ஞான தீபம்
மேலான ஹைதறாபாதின் தூபம்
காத்தநகர் தனிலுதித்த காமிலான
கருணை மிகு அஹ்மது மீரான் ஸாஹிப் எனும்
ஷெய்ஹுனா வெள்ளியாலிம் கரங்கள் பற்றி
சிறப்பான காதிரிய்யஹ் தரீக்கில் சொக்கி
மெஞ்ஞான இர்பானில் தோய்ந்து முங்கி –
மேலானார் ஜவாதப்பா மறைந்து கொண்டார்.
காத்தநகர் கண்டெடுத்த ஆணிமுத்து!
கதிபெறவே வந்த பெருமானின் சொத்து!
ஏற்றமுறு தௌஹீதில் விளைந்த வித்து!
எங்களது உள்ளமெல்லாம் நிறைந்த மஸ்த்து.!
அறிவுலகின் முழுவெள்ளி அணைந்ததம்மா!
அழகுமிகு மலர்முல்லை மடிந்ததம்மா!
பெரிதான அறிவுமலை சரிந்ததம்மா!
பெரியாலிம் தனைநினைக்க அழுகையம்மா!
இணைந்திருந்தோம் இறைவனவன் எடுத்துக் கொண்டான்
என்செய்வோம் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வோம்!
அணைந்திட்ட பெருமகனின் சாந்திக்காக
அனுதினமும் இறைவனிடம் இரந்து கேட்போம்.
தாறுல் பனாவென்னும் உலகை விட்டு
தாறுல் பகா அளவில் சேர்ந்து கொண்ட
பேரறிஞர் பெரியாலிம் அன்னார் மீது
பெரியோனே உன்னருளைச் சொரிவாய். ஆமீன்.!
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments