Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அவர்களின் தந்தை அலீ என்பவர் ஆகும். ஸ்பெய்ன், ஹாதிம் தாஈ வமிசத்தைச் சேர்ந்தவர்கள். ஸூபிய்யாக்களிடம் “அஷ் ஷெய்குல் அக்பர்” என்று பெயர் பெற்றவர்கள். பூமி மத்தியின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்களிடம் “அலிப், லாம்” இல்லாமல் “இப்னு அறபீ” என்று பிரபல்யமானவர்கள். காரணம் அந்த மக்கள் அல் காளீ அபூ பக்ர் இப்னுல் அறபீ அவர்களை விட்டும் வேறுபடுத்தி அறிவதற்கேயாகும். மொரோக்கோ வாசிகளிடம் “இப்னுல் அறபீ” என்பதாகும். (“அலிப்” “லாம்” சேர்த்து). அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் அன்னவர்களும் இவ்வாறே “அலிப்” , “லாம்” உடனே தன்னுடைய நூற்களில் எழுதுகின்றார்கள்.

ஸ்பெயினின் “முர்சியா” நகரில் ஹிஜ்ரீ 560ல் பிறந்தார்கள். தனது 8 வது வயதில் தன் குடும்பத்தாருடன் இஷ்பீலிய்யா – SEVILLA – நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கேதான் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அல் குர்ஆன், ஹதீது, சட்டம் போன்றவற்றைக் கற்றார்கள். தன்னுடைய வாலிப வயதில் சில நீதிபதிகளுக்கு எழுத்தாளராகப் பணி புரிந்தார்கள்.

பின்பு “துன்யா” இவ்வுலக தொடர்புகளைத் துண்டித்து “ஸூபிஸ” வழியில் சென்றார்கள். துறவரம் பூண்டு, மனித தொடர்புகளைக் குறைத்துக் கொண்டார்கள். சுமார் பத்து வருடங்கள் ஸ்பெய்ன் மற்றும் ஆபிரிக்க பகுதிகளில் சுற்றித் திரிந்தார்கள். இக்காலப் பகுதியில் ஸூபீகள் பலரைச் சந்தித்தார்கள்.

பின்பு புனித மக்கஹ் நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கே இரண்டு வருடங்கள் தங்கினார்கள். அதன்பின் துருக்கி நாட்டு அனாளூல் – மலத்யஹ் பகுதியில் சிறு காலம் தங்கினார்கள். தன்னுடைய மாணவர் முஹம்மத் கவ்னவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தாயைத் திருமணம் செய்தார்கள். பின் டமஸ்கஸ் நகரிலேயே தனது “வபாத்” வரை (ஹிஜ்ரீ – 638) தங்கியிருந்தார்கள்.

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகான்களில் மிகப் பிரசித்தி பெற்ற பெரிய மகான் ஆவார்கள்.

அவர்கள் “அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை” என்று நம்புகின்றார்கள். மேலும் புலன்களால் உணரப்படுபவை அனைத்தும் அல்லாஹு தஆலாவின் வெளிப்பாடுகள் என்றும் கருதுகின்றார்கள். இது – இந்த நம்பிக்கை அவர்களிடம் அல்லாஹ்வை அறிந்த ஞானிக்கும், அவனை அறியாத ஜாஹிலுக்கும் இடையே பிரித்துக் காட்டக் கூடிய “ஹகீகதுல் ஹகாயிக்” – எதார்த்தங்களின் எதார்த்தம் ஆகும்.

ஆரிப் – இறை ஞானி என்பவர் அனைத்து வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வை – ஹக்கை பார்ப்பவரே! இல்லை, அனைத்தையும் அவனாகப் பார்ப்பவரே! என்று அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு றஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்.
(புஸூஸுல் ஹிகம் – பக்கம்192)

பாமரர்களும், திரையிடப்பட்டவர்களும் ஹக் (இறைவனையும்) ஐயும், கல்க் – படைப்பையும் பிரிக்கின்றார்கள். படைப்புக்கு அல்லாஹ்வின் வேறான ஒரு வுஜூத் – உள்ளமையை தரிபடுத்துகின்றார்கள். ஆனால் இது இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடம் பேதமை ஆகும். இதையே அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். படைப்பென்பது மாயை ஆகும். எதார்த்தத்தில் அது ஹக் – இறைவனே!
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 160 )

படைப்பென்பது அவர்களிடம் “இல்லாதது”. அது இருப்பது போன்று எமக்கு காட்சியளிப்பது அதிலே “ஹக்” ஊடுருவிப் பாய்வதாகும்.

படைப்புக்கள் என்ற உருவத்தில் ஹக் தஆலா ஊடுருவிப் பாயவில்லையானால் இவ் வையகத்திற்கு “வுஜூத்” உள்ளமையே இருந்திருக்காது. (புஸூஸுல் ஹிகம், பக்கம் 55)

அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் (இல்லாத) சிருஷ்டியை நம்பவில்லை. இப்படைப்புக்கள் இருப்பதானது நிரந்தரமான, இறைவனின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றே விபரிக்கின்றார்கள். அங்கே ஷெய்குல் அக்பர் நாயகத்திடம் “காலிக்” படைத்தவன், “மக்லூக்” படைப்பு என் இரண்டு இல்லை. இக்கருத்தைப் பின்வரும் கவியின் மூலம் கூறிக் காட்டுகின்றார்கள்.

فَالْحَقُّ خَلْقٌ بِـهَذَا الْوَجْهِ فَاعْتَبِرُوْا
وَلَيْسَ خَلْقًا بِـذَاكَ الْوَجْهِ فَادَّكِرُوْا
مَنْ يَدْرِ مَا قُلْتُ لَمْ تَخْذُلْ بَصِيْرَتُهُ
وَلَـيْـسَ يَـدْرِيْهِ إِلَّا مَنْ لَـهُ بَـصَرٌ
جَـمِّـعْ وَفَـرِّقْ فَـإِنَّ الْعَيْـنَ وَاحِدَةٌ
وَهِـيَ الْكَثِـيْـرَةُ لَا تَبْقَـى وَلَا تَذَرُ
((فصوص الحكم ، ص 79

ஸூபிய்யாக்கள் இப்னு அறபீ நாயகத்தின் சொல்லையே இறுதி முடிவாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஸூபிஸம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களின் சொல்லையே நம்பத்தகுந்த வார்த்தையாகவும் எடுத்துக் கொள்கின்றார்கள். ஒரு ஸூபீயின் தஸவ்வுப் பற்றிய அறிவின் அளவுகோல் அவர் இப்னு அறபீ நாயகத்தின் கருத்துக்களை எந்தளவு புரிந்து கொள்கின்றாரோ அந்த அளவு ஆகும். இல்லை. இப்னு அறபீ நாயகத்தின் நூற்களை ஒருவன் தொடர்ந்து படித்துவருதால் அவனை அல்லாஹ்வை அறிந்த வலிய்யாக ஆக்கும் என்று நம்புகின்றார்கள்.
(மறாதிபுல் வுஜூத் லில் ஜீலீ, பக்கம் – 9)

சுருங்கக் கூறின் இப்னு அறபீ நாயகம் இக் கூட்டத்தாரில் (ஸூபீகளின்) முன்னோர்களின் சான்றாகவும், பின்னோர்களின் ஆதாரமாகவும் ஆகிவிட்டார்கள்.
(அல் மக்தூபாத் லிஸ் ஸர்ஹன்தீ, பக்கம் 2-5 )

முஹம்மத் அல் பூதீ, இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களில் “வஹ்ததுல் வுஜூத்”ஐ காட்டக் கூடிய அனைத்தும் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகின்றார். அவர்களை எந்தவொரு தவறைக் கொண்டும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் பேச்சிலிருந்து இந்தப் பொய்யை உறுதி செய்யாமலிருப்பதும், நல்லெண்ணம் கொள்ளாமலிருப்பதும் உண்மை என்றும் கூறுகின்றார்.
(அத் தஸவ்வுபுஸ் ஸலீம் ஜௌஹறுல் இஸ்லாம் – மகாலுல் பூதீ)இப்னு அறபீ நாயகம் அன்னவர்களின் பிரபல்யமான “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற நூல் இப்போதும் 37 வால்யூம் கொண்ட அவர்களின் கையெழுத்துப் பிரதிகளாக கிடைக்கப் பெறுவதும், மேலும் அவர்களின் பிரதான மாணவனும், வளர்ப்பு மகனுமாகிய முஹம்மத் அல் கவ்னவீ அவர்களின் கையெழுத்துடன் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் கிடைக்கப் பெறுவதும் (இப்பிரதிகளில் இப்னு அறபீ நாயகம் அவர்கிடமிருந்து கேட்டு உண்மைப்படுத்தப்பட்டவைகளும் உள்ளவை குறிப்பிடத்தக்கது), மேலே கூறிய முஹம்மத் அல்பூதீ உடைய நம்பிக்கையை மறுக்கின்றன. ஆகவே இப்னு அறபீ நாயம் தன்மீது தானே இட்டுக் கட்டினார்களா? என்ற வினாவும் உண்டாகின்றது.

(முஅல்லபாது இப்னி அறபீ லிஉத்மான் யஹ்யா, பக்கம் – 431, 477, 479)
இந்த புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் வரக் கூடிய பேச்சுக்களை அனைத்து ஸூபிய்யாக்களும் முழுமையாக நம்புகின்றார்கள். ஏனெனில் இப்னு அறபீ நாயகத்தை அவர்கள் அவ்லியாஉகளுக்கெல்லாம் அதிகாரியானவர்கள் என்றும், ஸீத்தீகீன்களுக்கெல்லாம் ஸித்தீக் என்றும், இறை நெருக்கத்தைப் பெற்றவர்களில் எல்லாம் மிக நெருக்கம் பெற்றவர்கள் என்றும், பெரும் ஷெய்கு (அஷ் ஷெய்குல் அக்பர்) என்றும், செங்கந்தகம் (அல் கிப்ரீதுல் அஹ்மர்) என்றும் நம்புகின்றார்கள். அவர்களின் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூலை அவர்கள் கோர்வை செய்த நூற்களில் மிக ஆழம் நிறைந்த வலுப்பமானது என்றும் நம்புகின்றார்கள். அந்த நூலுக்கு ஸூபீ இமாம்களில் நின்றும் பல விரிவுரையாளர்கள் விரிவுரை எழுதியுள்ளார்கள். இப்னு அறபீ நாயகம் அன்னவர்களை “ஸாஹிபுல் புஸூஸ்” என்று அறியப்படும் அளவுக்கு விரிவுரை எழுதியுள்ளார்கள்.

இப்னு அறபீ நாயகம் தனது புஸூஸுல் ஹிகம் என்ற நூலைப் பற்றி கூறுகையில் பின்வருமாறு கூறுகின்றார்கள். அறிந்து கொள்! ஹிஜ்ரீ 627ம் ஆண்டு முஹர்றம் இறுதிப்பத்தில் நான் நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் கனவில் கண்டேன். அவர்களின் முபாறகான கரத்தில் ஒரு “கிதாப்” நூல் ஒன்று இருந்தது. இது “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் இதை எடுத்து மக்களிடம் கொண்டு சேருங்கள். அவர்கள் இதைக் கொண்டு பயனடைவார்கள் என்று சொன்னார்கள். நான் “அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும், அவனது அவ்லியாஉகளுக்கும் செவிமடுத்து, வழிப்படுமாறு இறைவன் கட்டளையிட்டதுபோல் நான் செவிமடுத்து வழிப்படுகின்றேன் என்று கூறினேன். நம்பிக்கையை உறுதி செய்து கொண்டு, எண்ணத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு இந்தப் புத்தகத்தை (கிதாபை) வெளிப்படுத்தும் நோக்கத்தை (எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கட்டளையிட்டது போன்று கூட்டாமலும், குறைக்காமலும்) உறுதி செய்து கொண்டேன்.
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 47)

இப்னு அறபீ நாயகம் பின்வருமாறு பதிவிடுகின்றாhர்கள். அல்லாஹு தஆலா சகல வஸ்த்துக்களிலும் வெளியாகின்றான். எல்லா வெளிப்பாடுகளிலும் “ழாஹிர்” வெளியாகி உள்ளான். ஆனால் அவனை “ஷுஹூத்” காணுதலில் மிக சம்பூரணமானதும், அழகானதும் பெண்களிலேதான் என்று கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதன் ஹக் தஆலாவை பெண்ணிலே காட்சி பெற்றால் அது தனது பிரதிபலிப்பில் பெறும் காட்சியாகும். அவன் தன்னிலே காட்சி பெற்றால் “செய்பவன்” என்ற நிலையில் பெறும் காட்சியாகும். தன்னை விட்டும் வெளியான ஒரு உருவத்தின் உதவி இன்றி தன்னிலே ஹக் உடைய ஷுஹூதைப் பெற்றால் அவனுடைய “ஷுஹூத்” காட்சி ஒரு “வாஸிதா” உதவியின்றி பிரதிபலிப்பிலே பெற்ற ஷுஹூதாக – காட்சியாக ஆகும். எனவே அவன் பெண்ணிலே பெறக் கூடிய காட்சியே சம்பூரணமானதாகும். ஏனெனில் அவன் ஹக்கை “பாஇல், முன்பஇல்” (செயலுக்குரியவன், அதன் பிரதிபலிப்பு) என்ற அடிப்படையில் காணுகின்றான். அவனில் நினறும் அவனே குறிப்பாக பிரதிபலிப்பவன் என்ற அடிப்படையில் காணுகின்றான். இதனாலேயே நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பெண்களை விரும்பினார்கள். அவர்களிலே சமபூரண காட்சியை பெற முடியும் என்பதனாலேயே! ஏனெனில் ஒருபோதும் ஒரு பொருளின்றி ஹக்கை காணமுடியாது. அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் உள்ளமை (தாத்) கொண்டு தேவையற்றவன்.

இந்த அடிப்படையில் இல்லையென்றால் ஒரு பொருளின்றி ஹக்கை ஷுஹூத் செய்ய முடியாது. எனவே பெண்களில் காட்சி பெறுதல் என்பது காட்சிகளில் மிக வலுப்பமானதும், சம்பூரணமானதுமாகும்.
(புஸூஸுல் ஹிகம் , பக்கம் – 217 )

இப்னு அறபீ நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்புவதை “அல் அக்பரிய்யஹ்” எனும் தன்னுடைய ஸூபிஸ தரீகஹ் வின் அடிப்படையாக ஆக்கியுள்ளார்கள். தன்னுடைய 400 க்கும் அதிகமான நூல்களில் வியாபித்திருப்பது போன்று. அவர்களின் நூல்களில் பிராதனமானவைகள் சில…

01. அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்.
02. புஸூஸுல் ஹிகம்
03. இன்ஷாஉத் தவாஇர்
04. அத் தனஸ்ஸுலாதுல் மவ்ஸிலிய்யஹ்.
05. அல் பனாஉ
06. அத்தஜல்லியாத்
07. தகாயிருல் அஃலாக் வதர்ஜுமானுல் அஷ்வாக்.

இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். நான் ஸூபிய்யாக்களின் (கஷ்புடையவர்களின்) எண்ணற்ற நூல்களை பார்த்துள்ளேன். அவற்றில் அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் வசனங்களைப் போன்று விசாலமான, கருத்தாழமுள்ள ஒன்றை நான் காணவில்லை என்று கூறியுள்ளாரகள்.
(அல் யவாகீது வல் ஜவாஹிர் – 1(3) )

இப்னு அறபி நாயகம் அன்னவர்கள் அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற தன்னுடைய நூலின் 4ம் பாகம் 136 வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“அனைத்து வஸ்த்துக்களாகவும் தானே இருந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்”

மேலும் இப்னு அறபி நாயகம் கூறுகின்றார்கள். உன்னிடம் யாராவது நீ எதைக் கொண்டு இறைவனை தவ்ஹீத் செய்தாய் (ஒன்றாக்கினாய்) என்று கேட்டால், அவனிடம் “அவன் (அல்லாஹ்) எதிரான தன்மைகளை ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்வதால்” என்று சொல். “ளித்தைன்” எதிரான இரண்டு எது என்று கேட்டால், எந்தவொரு பொருளாயினும் அதை வருணிக்கப்படும் போது அதற்கு எதிரான ஒன்று இருக்கும். ஆனால் இறைவனை வருணிக்கும் போது அந்த வருணனைக்கு எதிரானதையும் அவன் ஏற்றுக் கொள்கின்றான். அவனுடைய உள்ளமை “தாத்” ஏனைய உள்ளமைகளுக்கு (படைப்புக்களின் “தாத்” ) ஒப்பாகாது. அவனுடைய சட்டம் ஏனைய சட்டங்களுக்கு ஒப்பாகாது.
(அத் தஜல்லியாத் லிப்னி அறபீ , பக்கம் – 447 )

இப்னு அறபீ நாயகம் தனது அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற நூல் 280 வது பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அறிந்து கொள். எந்தவொரு மனிதனின் வணக்கமும் அவன் இறைவனை சரியாக அறியாத வரை “ஸிஹத்” ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகாது. தன்னுடைய எண்ணத்தில் ஒரு “மஃபூத்” வணங்கப்படக் கூடிய ஒன்றை ஆக்கி அதை வணங்க வேண்டுமென்று எண்ணி அவன் வணங்கினால் அவனுக்கு அது கவலையையே ஏற்படுத்தும். மாறாக அல்லாஹ்விடமிருந்து எதனையும் பெற்றுத் தராது.

இப்னு அறபி நாயகம் தன்னுடைய அதிக நூல்களில்,

“படைப்பு என்பது மாயை –
எதார்த்தத்தில் அது ஹக்கேதான்.
இதை அறிந்த அனைவரும் –
தரீகஹ் வின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டான்”

என்று கூறியுள்ளார்கள். அதே போன்று அநேக நூல்களில் பின்வருமாறம் கூறியுள்ளார்கள்.

“நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் நான் மறைவேன்”.

(தப்ஸீர் இப்னி அறபீ – 2-31 )

அறிந்து கொள்! கனவில் இறைவனைக் காணலாம் என்பதில் அடிப்படையாகின்றது இமாம் தப்றானீ உள்ளிட்ட சில முஹத்திதீன்கள் பதிவு செய்த ஹதீது ஆகும். “நான் என்னுடைய இறைவனை முகத்தில் முடி முளைக்காத சுருண்டை முடியுள்ள வாலிபனின் உருவில் இரவு கனவில் கண்டேன். அதிக முடியிருந்தது. அவனின் இரு கால்களிரும் தங்கத்திலான இரு செருப்புக்கள் இருந்தது… (இந்த ஹதீது ஸஹீஹ் என்று இமாம் அல் ஹாபிழ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அல் யவாகீது வல் ஜவாஹிர் லிஷ் ஷஃறானீ, பாகம் – 01, பக்கம் – 115)

இப்னு அறபீ நாயகம் அவர்கள் தன்னுடைய அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற நூல் 381 வது பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். மேலே கூறப்பட்டுள்ள ஹதீதை விளங்குவதிலும், சரியானதா என்பதிலும் உலமாஉகளின் புத்திகள் தடுமாறின. அவர்களிற் சிலர் அதை மறுத்தனர். சிலர் தரிபடுத்தி அதன் கருத்தில் நின்று வலிந்துரை செய்தார்கள். ஆனால் எந்த வலிந்துரையும் அவசியமில்லை. நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்தக் கனவை கண்டது “ஆலமுல் கயால்” கனவுலகிலேயே. (தூக்கத்திலேயே). கனவுலக விடயத்தில் நின்றுமுள்ளதுதான் ஒரு மனிதன் கருத்து ரீதியானதை புலன்களால் உணரக் கூடியதாக கனவுலகில் காண்பதென்பது முடியுமான ஒன்றாகும். ஜடமில்லாத ஒன்றை ஜடத்தில் காண்பதும் முடியுமான ஒன்றாகும். ஏனெனில் கனவுலகம் என்பது அதைக் கொடுக்கும். அதைவிட விசாலமான ஒன்று இல்லை. மேலும் கூறுகின்றார்கள். அந்தக் கனவுலகின் விடயத்தில் நின்றுமுள்ளதுதான் அசாத்தியமான ஒன்றையும் அசாத்தியமாகக் காட்டும். எந்தவொரு உருவத்தினையும் ஏற்காத “வாஜிபுல் வுஜூத்” ஆகிய அல்லாஹ்வைக் காண்கின்றாய். நீ கண்ட கனவு சரியானது என்று சொல்வார். ஆனால் அதன் வலிந்துரை இவ்வாறு என்றும் சொல்வார். கனவுலகில் அசாத்தியமான ஒன்றை உள்ளமை ஏற்றுக் கொள்கின்றது. கருத்து ரீதியானவற்றை ஜடமாகக் கண்டு அதற்கு சட்டம் எடுக்க முடியுமானால் (அது படைப்பாக இருக்கின்ற நிலையிலும்) படைத்தவனுக்கு ஏன் முடியாது? அவர்களிற் சிலர் எவ்வாறு இறைவனுக்கு அசாத்தியமானதைப் படைக்க முடியாதென்று கூற முடியம்? அவனுக்கு அசாத்தியமான ஒன்றை “கயால்” ஆக ஆக்க முடியும். இப்னு அறபீ நாயகம் அவர்கள் இது தொடர்பாக 108, 109ம் பாடங்களில் நீட்டிக் கொண்டே செல்கின்றார்கள். கனவுலகில் இவ்வாறு நடப்பது அசாத்தியம் என்றால் எப்படி ஒரு மனிதன் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் (அந்த நேரத்தில் தன்னுடைய எதார்த்தமான நிலைக்கு மாற்றமாக) இன்னொரு நகரில் வேறோரு நிலையில் தன்னைக் காண்பான்? அது அவனேதான் வேறான ஒன்றல்ல.
(அல் யவாகீத், பாகம் 01, பக்கம் 115 )

அஷ் ஷெய்கு அபூ தாஹிர் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூறுகின்றார்கள். ஒரு உருவமில்லாத வஸ்த்து உருவத்தில் பார்க்கப்படுவது முடியாதென்பதல்ல. நீ பார்க்கவில்லையா? எத்தனையோ உருவமற்ற வஸ்த்துக்கள் கனவுலகில் பொருத்தமான உருவங்களில் பொருந்தக் கூடிய கருத்துக்களைத் தரக்கூடிய அமைப்பில் காண்பிக்கப்படுகின்றது. ஒப்புதல்களாகவோ, உதாரணங்களாகவோ அல்ல. அது ஈமான், “குப்ர்” , சிறப்பு, அல் குர்ஆன், நேர்வழி, வழிகேடு, உயிர் வாழ்தல் போன்ற கருத்து ரீதியானவை போல.

அறிந்து கொள்! ஈமானாகிறது, நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சொன்னது போல. (கனவுலகில் மனிதர்களை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. அவர்களில் சிலரினது “கமீஸ்” ஷேட் ஆகிறது கரண்டை வரை காணப்பட்டது. சிலரினது “ஷேட்” தண்டைக்கால் அரைவாசிக்கு காணப்பட்டது. உமர் இப்னுல் கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய “ஷேட்” ஐ தரையிலே இழுத்துக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்ட ஸஹாபாக்கள், அதற்கு என்ன வலிந்துரை கொடுத்தீர்கள் நாயகமே? என்று கேட்டார்கள். ஈமான் என்று பதிலளித்தார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்) எனவே ஈமான் என்பதற்கு உருவமில்லை. தோற்றமில்லை. ஆனால் ஈமான் “ஷேட்” உடைய உருவத்தில் காண்பிக்கட்டுள்ளது. அதே போன்றுதான் இணை வைத்தல் “குப்ர்”உம் ஆகும். கனவுலகிலே இருளின் உருவத்தைப் பெறும். அதேபோல் சிறப்பு என்பது குதிரையின் உருவிலும், அல் குர்ஆன் ஆகிறது முத்தின் உருவிலும், நேர்வழி என்பது ஒளியின் உருவிலும், வழிகேடு என்பது குருடு என்ற தோற்றத்திலும் உருப்பெறும்.
(அல்யாவகீத், பாகம் 01, பக்கம் – 108 )

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments