Tuesday, April 16, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஹஜ் வணக்கத்தின் அடிப்படை

ஹஜ் வணக்கத்தின் அடிப்படை

 



“ஹஜ் வணக்கத்தின் சிறப்புக்களும் கடமைகளின் அர்த்தங்களும்”
மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05
புனித இஸ்லாத்தின் கடமைகளில் ஐந்தாவதும் இறுதியுமான கடமையே ஹஜ் கடமையாகும். இக் கடமை உடற்பலம், பணப்பலம் உள்ளவர்களுக்கே கடமையாகும். இஸ்லாமிய ஏனைய கடமைகளான தொழுகை, ஸகாத், நோன்பு ஆகியவற்றை தான் வதியும் இடத்தில் இருந்தவாறே செய்துகொள்ள முடியும். ஆனால் ஹஜ் கடமை இதற்கு மாறானதாகும். ஹஜ் கடமையைச் செய்வதாயின் மக்கா சென்றே செய்ய முடியும்.
ஹஜ் கடமையின் சிறப்புக்கள் அனந்தம். அவற்றில் சிலதை இங்கு குறிப்பிடுகின்றேன்.
நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் – “ஒருவர் ஹஜ்செய்ய நாடி தனது வீட்டிலிருந்து வெளியேறின் அவர் தனது பாவங்களை விட்டும் வெளியேறுகின்றார். அது மட்டுமன்றி அவர் அன்று பிறந்த பாலகன் போல் மாறுகின்றார். அவர் ஹஜ்ஜை முடித்து வீட்டுக்குத் திரும்பும் வரை அவர் வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் 70வருட வணக்கங்கள் எழுதப்படுகின்றன. அவர் வீட்டுக்குத் திரும்பிய பின் அவரது  ”துஆ” வை நீங்கள் கொள்ளையிட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரது துஆ நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று
மேலும் நபிகள் நவின்றார்கள்.- ஒருவர் செய்யும் சரியான ஹஜ்ஜுக்கு சொர்க்கமே கூலியாகும்மென்று.
மேலும் நபிகள் சொன்னார்கள் ஒரு ஹாஜி தனது வீட்டை விட்டு வெளியேறின் அவர் இறைவன் பாதுகாப்பில் இருக்கிறான். அவர் தனது ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன் மரணித்தால் அவர் ஹஜ் செய்த கூலி அவருக்குக் கிடைக்கும். அவர் தனது ஹஜ்ஜை நிறைவேற்றினால் அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப்படும். என்று!!!
மேலும் நபிகள் நவின்றார்கள் – இறைவா ஹஜ் செய்த ஹாஜிக்கும் அவர் பிழை பொறுக்க தேடுவோருக்கும் நீ மன்னிப்பாயாக என்று!!!
இறை கட்டளை – சுலைமான் (அலை) அவர்களை இறைவன்  கஃபா செல்லுமாறும் அங்கு குர்பான் கொடுக்குமாறும் பணித்தான். அவர்கள் அங்கு சென்று 5000 ஒட்டகைகளையும் 5000 எருதுகளையும் 20000 ஆடுகளையும் அறுத்து குர்பான் கொடுத்தார்கள். அதன் பின் மதீனாவுக்குச் சென்ற அவர்கள் தன்னுடன் வந்தவர்களுக்கு    இதுவே இறுதி நபியின் ஹிஜ்ரத் வீடு எனக் கூறி அவர்களை ஈமான் கொண்டவருக்கும் அவர்களை உண்மைப்படுத்தியோருக்கும் சுப சோபனம் சொன்னார்கள்.
கஃபா எப்படித் தோன்றியது– வல்ல அல்லாஹ் மலக்குகளிடம் நான் பூமியில் ஒரு கலீபாவை (மனிதனை) படைக்கப் போகின்றேன் என்று சொன்னான். அதில் மலக்குகள் பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் ஓட்டக்கூடிய மனிதனையா படைக்கப் போகின்றாய்? என்று ஆட்சேபித்தார்கள். உடன் இறைவனுக்குக் கோபம் ஏற்பட்டு பல்லாயிரம் மலக்குகளை அழித்தான். பல்லாயிரம் பேரை மன்னித்தான். மன்னிக்கப்பட்டோரில் கப்ரில் கேள்வி கணக்குக் கேட்கும் முன்கர் – நகீர் மலக்குகளும் அடங்குவர். அந்த மலக்குகள் இறைவனின் பொருத்தத்தையும் மன்னிப்பையும் நாடி 7 நாட்கள் அர்ஷை வலம் வந்தனர். அவர்களை இறைவன் நோக்கி “நான் உங்களை மன்னிக்கின்றேன்.” ஆனால் நீங்கள் பூமியில் ஓரு வீட்டைக் கட்ட வேண்டும்.
மனிதர்களில் பாவம் காரணமாக நான் கோபித்தவர்கள் அந்த வீட்டுக்கு வந்து எனது பொருத்தத்தையும் மன்னிப்பையும் தேடுவார்கள். அவர்களை நான் மன்னிப்பேன். அதன் படி மலக்குகள் பூமியில் ஒரு வீட்டைக் கட்டினார்கள். அவ்வீடே கஃபதுல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது.
பேரறிஞர் இமாம் நவவீ (றஹ்) சொல்கையில் புனித கஃபா ஆறு முறை கட்டப்பட்டுள்ளது. முதலில்  மலக்குகளும் பின்னர் ஆதம் (அலை) அவர்களும் பின் இப்றாஹீம் (அலை) அவர்களும் பின் குறைஷிகளும் பின்னர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும் பின்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்களும் கட்டினார்கள்.  என்று தற்போதைய அமைப்பு இறுதியாகக் கட்டிய ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள் கட்டிய அமைப்பேயாகும்.
ஹஜ்ஜின் அர்கான்களும் அவை உணர்த்தும் தத்துவங்களும் – ஹஜ்ஜின் அர்கான் (பர்ளுகள்) 5 ஆகும். இவையுணர்த்தும் தத்துவங்களை அறிந்து மக்கள் செய்வதில்லை. கடமையைச் செய்கின்றோம் என்று செய்து முடித்து விடுகின்றனர். ஆனால் கடமைகளின் அர்த்தங்களைத் தெரிந்து செய்யும் போது அதிக பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஹஜ் கடமையின் நிய்யத் மனதில் வைத்து நாவால் மொழிவதைத் தவிர எதைச் செய்வதற்கும் ஓதல் கடமையல்ல. எல்லாம் உடற்செயற்பாடேயாகும். எந்த ஓதலும் இல்லாமல் ஹஜ் செய்தாலும் ஹஜ் நிறைவேறும் ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் சுன்னத்தான ஓதல்கள் உள்ளன. அதைத் தெரிந்தவர்கள் ஓதிக் கொள்வார்கள். ஓதத் தெரிந்தவரும் ஓதத் தெரியாதவரும் செய்யும் வணக்கமாகவே ஹஜ்ஜை இறைவன் கடமையாக்கியுள்ளான்.
பணப்பலமும் உடற்பலமும் பெற்ற ஒருவனுக்கு ஒரு ஹஜ் செய்வதே கடமையாகும். ஏனையவை சுன்னத்தாகும். எத்தனை முறை ஹஜ் செய்தாலும் அல்லாஹ் அதை ஏற்று நற்கூலி வழங்குவதுடன் அவருக்கு  நரகத்தையும் ஹறாமாக்கி விடுகின்றான்.
இஹ்றாம் கட்டுதல் – ஒருவர் இஹ்றாம் கட்ட நாடினால் அதற்கு முதல் அவர் நகம் வெட்டி, குளித்து மணம் பூசிய பின்னே இஹ்றாம் உடை அணிய வேண்டும். ஆணாக இருப்பின் தலையை மறைத்தல், தைக்கப்பட்ட உடை அணிதல் போன்றவை ஹறாமாகும். பெண்ணாக இருப்பின் தைக்கப்பட்ட உடை ஆகுமானதுடன் கைகளை மறைத்தல் கூடாது.
இஹ்றாம் உடை அணியும் போது ஹஜ்ஜுக்காக அல்லது உம்றாவுக்காக நிய்யத் வைத்து இஹ்றாம் கட்டிக் கொள்கின்றேன். எனது உடை வெண்மையாக இருப்பது போல் எனது இதயத்தையும் வெண்மையாக்குவாயாக. என் குற்றத்தை அழித்து விடுவாயாக என்று எண்ணி இறைவனை நாட வேண்டும்.
அறபாத்தில் தரித்தல் – அறபாத்தில் தரிப்பது இரண்டாவது றுக்னாகும். அறபாவுடைய நாளில் ஸவாலுக்குப் பின் ஒரு வினாடி நேரமாவது அதில் தரிக்க வேண்டும். ஒருவர் அறபாவில் தரிக்கவில்லையானால் அவர் ஹஜ் செய்தவராகமாட்டார். காரணம் அறபாதான் ஹஜ் என்று நபிகள் நவின்றுள்ளார்கள். அறபாவில் தரித்திருக்கும் போது அறபாவை மஹ்ஷர் மைதானமாகவும் அதில் தானிருப்பதாகவும் கருத வேண்டும். அங்கு கேட்கப்படும் துஆ ஏற்கப்படும்.
இமாம் நஸபீ (றஹ்) அவர்கள் நவின்றார்கள் – “சாலிஹீன்களில் ஒருவர் ஹஜ் செய்து அறபாவில் தரித்து விட்டு தனது பணப்பையை மறந்துவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் நினைவுக்கு வந்ததும் பணப்பையை எடுப்பதற்கு மறுநாள் அறபாவிற்கு வந்தார். அங்கு குரங்குகளையும், பன்றிகளையும் கண்டு திடுக்கிட்டு பயந்து ஓடினார். அங்கு அவரைப் பார்த்த குரங்குகளும், பன்றிகளும் மனிதா! பயப்படாதே. ஏன் எமைக் கண்டு ஓடுகிறாய். நாங்கள் ஹாஜிகளின் பாவங்கள் தான் அவர்களின் பாவங்கள்தான் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருப்பெற்றிருக்கின்றோம். அவர்கள் பாவச் சுமைகளை இறக்கி வைத்து பரிசுத்தவான்களாகச் சென்றுவிட்டார்கள். நீ உன்னுடைய பணப்பையை எடுத்துச் செல் என்றன. அவர் தனது பணப்பையை எடுத்துச் சென்றார்” என்று!
அறபாவில் நபிகள் செய்த பிரார்த்தனையால் அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்படுவதாக நபிகள் நவின்ருள்ளார்கள். என்னே அறபாத்தின் தத்துவம்!
தவாபுல் இபாழஹ் – இது மூன்றாவது றுக்னாகும். பொதுவாக கஃபாவை தவாபு செய்தல். அதன் நிபந்தனை என்னவெனில் தவாப் என்பது ஹஜறுல் அஸ்வதைக் கொண்டு ஆரம்பித்து இதயம் கஃபாவுக்கு நேர்படும் வகையில் இடப்பக்கம் கஃபா இருக்க ஏழு முறை அதைச் சுற்ற வேண்டும். அத்துடன் ஹஜறுல் அஸ்வதை முத்தமிடுவதுடன் அதன் மீது தனது நெற்றியையும் வைக்க வேண்டும். முத்துவதற்கு முடியாத விடத்து அதன் பால் தனது கையைக் காட்டி முத்தமிட வேண்டும்.
ஹஜறுல் அஸ்வத் –  இதன் அர்த்தம் கறுப்புக் கல் என்பதாகும். இக்கல் “ஹஜறுல் அப்யழ்” வெள்ளைக் கல்லாகவே சொர்க்கத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டது. என்றும் இதைத் தவிர வேறு கல் சொர்க்கத்திலிருந்து இறக்கப்படவில்லை என்றும் இமாம் தபறானீ அவர்கள் சொல்கின்றார்கள்.
இக்கல் சொர்க்கத்திலிருந்து இறக்கி வைக்கப்படும் போது பாலை விட வெண்மையாக இருந்ததாகவும் ஆதமுடைய மக்கள் முத்தியதன் காரணமாக அவர்களின் பாவங்களை தான் உறிஞ்சி தான் கறுப்பாகி விட்டதாகவும் அவர்கள் தூய்மையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
“சஈ” செய்தல் – இது நான்காவது பர்ழாகும். இது சபாவில் இருந்து மர்வாவுக்குத் தொங்கோட்டம் ஓடுவதைக் குறிக்கும். ஏழு தரம் இந்த அமலைச் செய்ய வேண்டும். இந்த அமல் இப்றாஹீம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜர் செய்த அமலாகும். தன்மைந்தருக்கு தண்ணீர் தேவைப்பட்ட போது தண்ணீர் தேடி சபாவிலிருந்து மர்வாவுக்கும், மர்வாவிலிருந்து சபாவுக்குமாறு ஓடித் திரிந்தார்கள். அச் செயலை அல்லாஹ் ஹஜ் வணக்கத்தில் எமக்கு கடமையாக்கியுள்ளான். இவ்வாறு ஓடும்போது இறைவன் தன்னில் அடைக்கலம் வைத்துள்ள ஏழு தன்மைகளான குத்றத் – சக்தி, இறாதத் – நாட்டம், சம்உ – கேள்வி, பஸர் – பார்வை, ஹயாத் – உயிர், இல்மு – அறிவு, கலாம் – பேச்சு ஆகிய ஏழு அடைக்கலப் பொருட்களையும் இறைவனிடம் ஒப்படைக்கின்றேன். நான் எதுவும் சொந்தமில்லாதவன் என்று நினைத்தல் வேண்டும். இதுவே “சஈ” செய்வதன் அடிப்படையாகும்.
“ஹல்கு” முடி சிரைத்தல் – ஆண்கள் முடி சிரைப்பதாகும். பெண்கள் சில முடிகளை கத்தரிப்பதாகும். ஆண்கள் விரும்பின் சிரைக்காமல் சில முடிகளை கத்தரிப்பதுமாகும். இச் செயல் நான் எனும் உணர்வுடன் ஆணவம் கொண்டு மனிதன் வாழ்வதை விட்டு நான் என்பது அழியக்கூடியது. அல்லாஹ்வே நித்தியன் என்று ஆணவம் நான் என்ற மரத்தைத் தறிப்பதாகும்.
மற்றும் செயல்கள் – ஹஜ்ஜில் செய்யப்படும் ஜம்றாக்களில் கல் எறிதலும் கடமையான செயலாகும். இச் செயல் தன்னை இறை நினைவை இழக்கச் செய்யும் மனதை ஆட்டிப் படைக்கும் ஏழு நப்ஸுகள் என்ற ஷெய்தான்களை மனதிலிருந்து எறிவதாகும். அதே போல் குர்பான் கொடுத்தல் நான் என்ற உணர்வையும் வேற்றுமை, ஆணவத்தையும் அறுக்கும் செயலாகும். இதே போல் ஹஜ் வணக்கம் ஆன்மீகத்தை அடிப்படையாக்க் கொண்ட வணக்கமாகும்.
அதே போல் ஸம்ஸம் நீர் அருந்துவதுமாகும். கஃபாவைத் தவாபு செய்த பின் மகாமே இப்றாஹீமுக்குப் பின் இரண்டு ரக்அத்துத் தொழுத பின் ஸம்ஸம் நீரைக் குடித்தால் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஸம்ஸம் நீரைக் குடிப்பதுடன் முகம், நெங்சு, தலையைக் கழுவுவதும் நல்ல செயற்களாகும். ஒரு மனிதன் தனது இரண்டு விலா சள்ளைப் பகுதி நிறையும் வரை ஸம்ஸம் நீரை குடிப்பது சுன்னத்தாகும். முனாபிக்குகளான நயவங்சகர்கள் அதிகமாக ஸம்ஸம் நீர் குடிக்கமாட்டார்கள். கியாமத் நாளின் தாகத்திற்காக நான் ஸம்ஸம் நீரை அதிகமாக குடிக்கின்றேன். என்று அப்துல்லாஹ் பின் முபாறக் (றஹ்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
மதீனா பயணம் – ஹஜ்ஜை முடித்தபின் மதீனா சென்று நபிகள் (ஸல்) அவர்களின் புனித கப்ர் ஷரீபை ஸியாரத் செய்வது பலமிக்க சுன்னத்தாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில் “எவர் எனது கப்ரை ஸியாரத் செய்கின்றாறோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரை) கடமையாகி விட்டது.” என்று!!!
மேலும் நபிகள் (ஸல்) சொல்கையில் ‘எனது மௌத்தின் பின் எவர்   எனது கப்ரை ஸியாரத் செய்கின்றாறோ அவர் என்னை எனது ஹயாத்தில் ஸியாரத் செய்தவர் போலாகின்றார். எனது கப்ரை தரிசிக்காதவன்  என்னை வெறுத்து விட்டான்’ என்று
எனவே மேற்கண்ட பொன்மொழிகள் மூலம் நபிகள் (ஸல்) அவர்களை ஸியாரத் செய்வது மிக உன்னத சுன்னத்தாகக் கணிக்கப்படுகிறது. எவர் ஸியாரத் செய்யவில்லையோ அவர் நபிகள் (ஸல்) அவர்களை வெறுத்தவராக கருதப்படுவார். நபிகளை வெறுப்பது ஹறாமாகும். ஹறாத்தை செய்தால் தண்டனை கிடைக்கும்.
நபிகள் (ஸல்) அவர்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பதால்தான் நாம் அவர்கள் மீது அத்தஹிய்யாதில் அவர்களை முன்னிருத்தி ஸலாம் சொல்வது பர்ழாக்கப்பட்டுள்ளது. ஸலாம் சொல்லவில்லையானால் தொழுகை நிறைவேறாது.
எனவே, நபிகளின் ஸியாரத்திற்குச் சென்று அவர்களின் முன் மரியாதையுடன் நின்று ஸலாமுரைப்போம். அதே போல் அவர்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கலீபா அபூபக்கர் சித்தீக் (றழி), கலீபா உமர் பாறூக் (றழி) ஆகியோருக்கும் ஸலாம் சொல்வோம். நபிகள் நாதரின், அவர்களின் தோழர்களின் அன்பைப் பெற்ற ஹாஜிகளாய் தாயகம் திரும்பி குற்றமற்ற பாலகராய் வாழ்ந்து பாலகர்களாகவே மரணிப்போம்.
வல்ல அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் ஹஜ் செய்யவும், நபிகளின் கப்றை ஸியாரத் செய்வதற்கும் பேரருள் புரிவானாக ஆமீன்!!!
+++++++++++++++++++—————————++++++++++++++++++++++++—————–
“ஹஜ்” வணக்கம்   புரிந்து செய்தவருக்கு பேரின்பம் கிடைக்கும்

மக்கஹ் சென்று புனித “ஹஜ்” வணக்கத்தை நிறைவேற்றி மதீனஹ் சென்று நபீகள் நாதரை ஸியாரத் செய்து அருள்பெற்று உலக முஸ்லிம்கள் தங்களது தாயகத்திற்குத் திரும்பிவிட்டனர்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னவரது ஹஜ் வணக்கத்தை ஏற்று, அவர்கள் வாழ்வில் பேரருள் புரிந்து, அவர்களைத் தனது நல்லடியார்களாக ஏற்றுக் கொள்வானாக என்று முதலில் பிரார்த்திக்கின்றேன்.
இஸ்லாமின் கடமைகளான கலிமஹ், தொழுகை, ஸகாத், நோன்பு ஆகியவற்றை அவரவர் தமது தாயகத்தில் இருந்துசெய்து கொள்ள முடியும். ஆனால் “ஹஜ்” வணக்கம் செய்ய வேண்டுமாயின் அதற்கு மக்காஹ்வுக்கே செல்ல வேண்டும். அங்கு சென்றே ஹஜ் கடமையைச் செய்ய முடியும்! அதனாற்தான் இலட்சக்கணக்கான உலக முஸ்லிம்கள் மக்கஹ் சென்று ஹஜ் கடமை செய்து வருகின்றனர்.
ஹஜ் கடமைகளி்ல் தொழுகையைப் போன்று வாயினால் ஓதவேண்டிய பர்ழான எந்த ஓதல்களும் இல்லை. செயற்பாடுகளே கடமையாக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜில் செய்யப்படும் கடமைகளை மார்க்கம் ஆகுமாக்கவில்லையானால் இன்றைய முஸ்லிம்களில் பலர் (வஹ்ஹாபியக் கொள்கையுடையவர்கள்) அவற்றை “ஷிர்க்” என்று சொல்லத் துணிந்துவிடுவர்.
காரணம் ஹஜ்ஜின் செயற்பாடுகளில் “தவாப்” கஃபாவைச் சுற்றுதல், கல்லுக்கு கல்லெறிதல், தொங்கோட்டம் ஓடுதல், கல்லை முத்தமிடுதல், அறபஹ்வில் தரித்தல், தலைமுடி சிரைத்தல், வௌ்ளையுடை அணிதல், தல்பியாச் சொல்லுதல், குர்பான் கொடுத்தல், ஸம் ஸம் நீரைக் குடித்தல், குளித்தல் போன்றவைகளை இஸ்லாம் கடமைகளென்றும், சுன்னத்துக்களென்றும், நல்லமல்களென்றும், சொல்லவில்லையானால் மனிதன் அவற்றைப் பிறிதொரு கோணத்திலேயே நோக்குவான் என்பதில் ஐயமில்லை.
அன்னிய மத சகோதரர்கள் தங்களது திருத்தலங்களுக்குச் சென்று கோயிலைச்சுற்றுகின்றனர். தூய ஆடை அணிகின்றனர், ஆற்றில் குளிக்கின்றனர், மொட்டையடிக்கின்றனர், அரோஹரா என்று எல்லோரும் சேர்ந்து சொல்கின்றனர். இன்னும் பல விடயங்களில் ஈடுபடுகின்றனர்.
இவற்றை “ஷிர்க்” என்று சொல்லும் முஸ்லிம்களாகிய நாம் “ஹஜ்” வணக்கத்தில் செய்யப்படும் செயற்பாடுகளை “இபாதத்” வணக்கம் என்று சொல்கின்றோம்.
“கஃபதுல்லாஹ்” என்பது கல்லால் கட்டப்பட்ட ஒன்றுதான். கஃபாவைத் “தவாப்” செய்பவர்கள் கல்லால் கட்டப்பட்ட ஒரு   வீட்டைத்தான் ஏழுமுறை சுற்றுகின்றனர்.
கோயிலைச் சுற்றுவதை நிராகரிக்கும் நாம் கஃபாவைச் சுற்றுவதை ஏன் ஏற்றோம்? அதில் அமைந்துள்ள தத்துவம் என்ன? சிந்தித்துப் பார்த்தோமா ?
பெரியார்களின் கப்றுகளை, அவர்கள் பாவித்த பொருள்களை முத்தமிட்டு “பறகத்” பெறுவதை அறியாமையால் “ஷிர்க்” என்று சொல்லும் நாம் “ஹஜறுல் அஸ்வத்” என்ற கல்லை பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஏன் முத்தமிடுகின்றோம் சிந்தித்தோமா?
காபிர்கள் தமது வணக்கஸ்தலங்களில் மொட்டை அடிக்கின்றனர். அது “ஷிர்க்” என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதே செயலை நாம் ஹஜ் கடமைகளின் போது செய்கின்றோம். அது “இபாதத்” என்கின்றோம். ஏன் அது “இபாதத்” ஆகியது என்பதைச் சிந்தித்தோமா?
காபிர்கள் தமது வணக்கஸ்தலங்களில் மொட்டை அடிக்கின்றனர். அது “ ஷிர்க் ” என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதே செயலை நாம் ஹஜ் கடமைகளின் போது செய்கின்றோம். அது   “இபாதத்” என்கின்றோம். ஏன் அது “இபாதத்” ஆகியது என்பதைச் சிந்தித்தோமா?
காபிர்கள் அவர்களது கடமைகளுக்கேற்ப ஒரே நிற உடைகளை அணிகின்றனர். அதேபோல் நாங்களும் இஹ்றாம் கடமைக்காக வெண்மைத் துணியையே அணிகிறோம். ஏன் என்று சிந்தித்தோமா?
ஹஜ்ஜின் போது “ சயீ ” செய்கின்றோம் சபா- மர்வா மலைகளுக்கிடையே ஓடுகின்றோம். தொங்கோட்டம் ஓடுகின்றோம். ஏன்? அது ஓடுவதற்கு என்ன விளையாட்டுத் திடலா? சிந்தித்தோமா?
ஹஜ் வணக்கத்தில் ஷைத்தானுக்குக் கல் எறிவதாக கல்லுக்குத்தானே கல்லால் எறிகிறோம். இதை இஸ்லாத்தின் தத்துவம் புரியாதவர்கள் பிழை என்பார்களே….. ஏன் கல்லுக்குக் கல்லால் எறிந்தோம் புரிந்ததா?
காபிர்கள் தமது வணக்கத்தலங்களில் அதிலுள்ள நீர் தடாகத்தில் குளித்தும் , குடித்தும் செயற்படுகிறார்களே அதேபோல் ஸம்ஸம் நீரை நாம் நின்று குடித்தும் – அங்கு குளித்தும் செயற்படுகின்றோமே ! காரணம் புரிந்தா செயற்படுகின்றோம்?
காபிர்கள் மிருகங்களை அறுத்துப் பலியிடுகிறார்கள். நாங்களும் ஹஜ்ஜின் போது “ குர்பான் ” கொடுக்கின்றோம். புரிந்தா செய்கின்றோம்?
காபிர்கள் எல்லோரும் சேர்ந்து தமது வணக்கத்தலங்களில்       “ அரோஹரா ” என்று முழங்குகின்றார்கள். நாங்கள் மக்கஹ்வில் “ தல்பியா ” “ லெப்பைக், அல்லாஹூம்ம லெப்பைக் ” என்று முழங்குகின்றோம். இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை அறிந்தோமா?
இப்படி இப்படி நாம் செய்யும் வணக்கங்களைச் சரிகாண்கின்றோம். காபிர்கள் செய்வதை ஷிர்க் என்கின்றோம்.
இருவர் செய்வதிலும் சிறு சிறு வித்தியாசம் காணப்படினும் செற்பாடு ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்க்ள செய்வதை இஸ்லாம் ஏற்கிறது. காபிர்கள் செய்வதை மறுக்கிறது. ஏன் ? தத்துவம் புரிந்ததா?
எனவே ஹஜ் வணக்கம் என்பது மார்க்கக் கடமை என்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவ்வணக்கச் செயற்பாடுகளை வெறுமனே பார்த்தால் அன்னியருக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். மார்க்கக் கடமை என்று நோக்கும்போதே அது ஏற்க்கப்படுகின்றது, வசதி உள்ளவர்கள் அதைச் செய்வது கடமையாகிறது. விட்டால் அல்லாஹ்வின் தண்டனை கடமையாகிவிடுகிறது.
எனவே ஹஜ் செய்வோம். அதன் கடமைகளின் இரகசியங்களையும் அதன் தத்துவங்களையும் புரிந்து செய்வோம்.
ஹஜ் செய்யும் சிலர் ஹஜ் கடமை முடிந்ததும், மதீனஹ் வந்து எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை         “ ஸியாறத் ” தரிசிக்காமலேயே நாடு திரும்பிவிடுகின்றனர்.
இச்செயல் நபீ மீது அவர்களுக்கு “ மஹப்பத் ” அன்பில்லை என்பதையே உணர்த்துகிறது. நபீமேல் பூரண அன்பு வைக்காதவர் “ முஃமின் ” விசுவாசி அல்லன் என்று அவர்களே கூறியுள்ளார்கள்.
நபீயின் மீது அன்பில்லாத – விசுவாசியல்லாதவனுடைய ஹஜ் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும். சிந்தித்தோமா?
எவர் ஹஜ் செய்து முடித்தபின் மதீனஹ் வந்து என்னை   “ஸியாறத்” தரிசிக்கவில்லையோ அவர் “பகத்ஜபானீ” என்னை நிச்சயம் வெறுத்துவிட்டார் என்று நபீகள் திலகம் நவின்றுள்ளார்கள்.
எனவே, நபீயை வெறுத்தவனின் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது உறுதி, காரணம் நபீயை வெறுத்தவன் அல்லாஹ்வையே வெறுத்தவனாகின்றான்.
ஹஜ் செய்வோம். அகமியங்களை அறிந்து செய்வோம். தத்துவங்களைப் புரிவோம். அண்ணல் நபீயை ஸியாரத் செய்வோம். அவர்களின் பேரன்பை இவ்வுலகிலும், மறு உலகிலும் பெறுவோம் !
ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யாறப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments