Wednesday, April 24, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.

வைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.

-சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-
இறை நேசர்களான வலீமார் வரிசையில் தமிழ்நாடு முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்போவா னோடையில் கொலுவீற்றிருந்து “கறாமத்” என்னும் அற்புதம் நிகழ்த்திவரும் “ஷெய்குத்தவா” ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.
இவர்கள் நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்தவர்கள் என்றும் அக்காலத்தில் தலைசிறந்த வைத்திய மேதையாக இருந்தவர்கள் என்றும் அவர்களைக் கனவில் கண்டுஇவ்விவரத்தை அவர்கள் மூலம் அறிந்தோர் கூறுகின்றனர்.

இப்பொழுது அவர்களின் புனித உடலைச் சுமந்திருக்கும் புண்ணிய பூமி ஜாம்போவானோடை அக்காலத்தில் யானை, சிங்கம், கரடி போன்ற மிருகங்கள் வாழ்ந்த அடர்ந்த காடாக இருந்த்து. யானைகள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் ஓர் அழகிய நதியும் அங்கு ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதி இப்பொழுதும் உண்டு.
முத்துப்பேட்டைக்கும்,ஜாம்போவானோடைக்கும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உண்டு. அந்நேரம் முத்துப்பேட்டையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் ஜாம்போவானோடையில் விவசாய நிலங்கள் இருந்தன. ஒரு நாள் அங்கு சென்ற ஓர் இந்துமத விவசாயி தனது மண்வெட்டியால்நிலத்தை வெட்டிப்பண்படுத்திக் கொண்டிருந்த பொழுது வெட்டப்பட்ட ஓர் இடத்திலிருந்து இரத்தம் சீறிப்பாய்ந்து அவரின் முகத்தை நனைத்தது. அக்கணமே அவரின் இருகண்களும் பார்வையை இழந்தன அவரும் அவ்விடத்திலேயே மயக்கமுற்று விழுந்து விட்டார். வழமைபோல் அவருக்குப் பகற்சாப்பாடு எடுத்துச்சென்ற அவரின் மனைவி தனது கணவன் விழுந்து கிடந்ததையும் அவரின் அவரின் முகத்தில் இரத்தம் வழிந்தோடி இருந்ததையும் கண்டு பயந்து நடுங்கினவளாய் அவரண்டைசென்று​ அவரின் பெயர் சொல்லி அழைத்தாள். மயக்கம் நீங்கி எழுந்த கணவன் அவளிடம் நடந்தவற்றைக் கூறி கண்ணீர் மல்கி நின்றார். அவர் வெட்டிய இடத்தை அவள் கூர்ந்து கவனித்தாள் அங்​கே ஒரு கால் இரத்தம் தோய்ந்த நிலையில் இருக்கக்கண்டு “ஐயோ கடவுளே”என்று கூறி வியந்தவளாய் அக்காலுக்கு கைகூப்பி நின்றாள். சில நொடிகளில் அவரின் இரு கண்களும் இழந்த பார்வையை மீண்டும்​ பெற்றுக்கொண்டன.
கணவனும் மனைவியும் சொல்லொணா வியப்புடன் கடவுளின் தத்துவம் நினைத்து வியந்தவர்களாக வீடு வந்து சேர்ந்தனர்
அன்றிரவு இருவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் யா​ரோ ஒருவர் கதவை தட்டும் சப்தம் அவர்களுக்கு கேட்டது. கதவை திறந்தவர்கள் நாற்பது முழம் உயரம் மதிக்கத்தக்க அடர்ந்த தாடியுள்ள பச்சை நிறத்தலைப்பாகையும் நீண்ட சட்டையும் அணிந்த ஒருவர் வீட்டு வாயலில் நின்றுகொண்டிருந்தார். அதைக்கண்ட இருவரின் உள்ளத்திலும் அன்று பகல் விவசாய நிலத்தில் நடந்த சம்பவம் நிழலாடத்தொடங்கியது. இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவர்களிடம் அங்கு​ தோன்றிய பெரியார் நான் நபீ மூஸா (அலை)அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஒரு வைத்திய மேதை அவர்களைக்கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட ஒரு விசுவாசி எனது பெயர்​ ஷெய்குதாஊத் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.
பயத்தாலும் பக்தியாலும் சிலை​போலான கணவனும் மனைவியும் விடியும் வரை விழித்திருந்து முத்துப்பேட்டை முஸ்லிம்களை அழைத்து தமக்கு நடந்தவற்றை விரிவாகச்சொன்னார்கள்.
நபீமார், வலீமார்களின் உடலை மண் சாப்பிடமாட்டாதென்று இஸ்லாமிய தத்துவத்தை ஏற்கனவே அறிந்ததினாலோ என்னவோ முத்துப்பேட்டை முஸ்லிம்கள் ஜாம்போவானோடைக்கு விரைந்தனர். வியர்த்த நிலையிலும் இரத்தம் பீறிட்ட நிலையிலும்ஒருமனிதனின் காலில் இருந்தது கண்டு வியர்ந்தவர்களாக அவ்விடத்தைத்தோண்டி அங்கிருந்த பெரியாரை பக்குவமாகவும், பக்தியுடனும் வெளியே எடுத்தனர் அங்கு நின்ற இந்து மதக்கணவனும், மனைவியும் இவர்தான் நேற்றிரவு எமது வீட்டிற்கு வந்தவர் என்று கூறினர்.
பின்னர் முஸ்லிம்கள் அந்த மகானைக் குளிப்பாட்டிக் கபனிட்டு தொழுகை நடத்திய பின் அவ்விடத்திலே​யே நல்லடக்கம் செய்து விட்டு தென்னை, பனை ஒலைகளினால் ஒரு சிறு குடிசையையும் அமைத்து தினமும் “சியாறத்”தரிசித்து வந்தார்கள்.
இச்சம்பவம் சுமார் எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அன்று முதல் இன்றுவரை சகலஇன,மத மக்களும் அங்கு சென்று “சியாறத்”தரிசித்தும் அங்கு தங்கியிருந்து தமது நாட்டங்கள் ​தேவைகளைப் பெற்றும், நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற்றும் வருகின்றனர்.
அன்று சிறு குடிசையாக இருந்தமகான் அவர்களின் “தர்ஹா” அடக்கத்தலம் இன்று வானைத்தொடும் மனாறாக்கள் கொண்ட எழில்மிகு தோற்றத்தில் பிரகாசிக்கின்றது. தினமும் பல மதங்களையுடைய பல்லாயிரம் பக்தர்கள் அங்கு வந்து கைகூப்பி நிற்பதையும் “துஆ” கேட்டு நிற்பதையும் அவர்களைப் புகழ்ந்து கவிபாடி நிற்பதையும் இன்றும் காணலாம். சுமார் எழு நூறு ஆண்டுகளின் முன் அறிமுகமான இந்த தர்ஹாவில் உள்ள விசேடம் என்னவெனில் “சியாறத்” கட்டிடத்தினுள் பெண்கள் பிரவேசிக்க முடியாது. யாராவது ஒருபெண் அத்து மீறி உள்ளே சென்றால் அவள் எரிந்து சாம்பலாய் விடுவாள் அல்லது அவளின் ஆடையேனும் எரிந்து விடும் அதற்குபல சம்பவங்கள் சான்றாக உள்ளன.
இந்த மகானின் தர்ஹா அடக்கவிடத்தில் இப்படி ஒரு வி​ஷேட அம்சம் இருப்பதற்கு ஆன்மீக அடிப்படையில் ஆதார பூர்வமான விளக்கம் உண்டு.
அதாவது அல்லாஹ்வுக்கு​“ஜலாலிய்யத்” என்றும் “ஜமாலிய்யத்”இரண்டு தன்மைகள் உள்ளன. அவனின் திருநாமங்கள் யாவும் இவ்விரண்டில் ஒன்றைச் சேர்ந்ததாகவே இருக்கும்.
“ஜலாலிய்யத்”என்றால் சூடான வேகமான தன்மை என்றும் “ஜமாலிய்யத்”என்றால் குழுமையான சாந்தமான தன்மை என்றும் சொல்லப்படும்.
ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம், போன்ற திருநாமங்கள்“ஜலாலிய்யஹ்” என்றும் றஊப், றஹீம், முன்இம் போன்ற திருநாமங்கள் “ஜமாலிய்யஹ்” என்றும் சொல்லப்படும்.
வலீமார்களிற் சிலர் அல்லாஹ்வின் “ஜலாலிய்யத்”சூடான தன்மை மிகைத்தவளாயிருப்பர். இவர்கள் அநேக நேரங்களில் சூடானவர்களாயும்,​​ கோபமானவர்களாயும் இருப்பார்கள். இவர்களின்​ பேச்சும் நடவடிக்கையும் சூடானவையாக​வே இருக்கும். சாந்தம் சாந்தியை, இவர்களில் எதிர்பார்க்க முடியாது.
மஹான் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் “ஜலாலிய்யத்”என்ற தன்மை மிகைத்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அவர்களின் அடக்கவிடத்தினுள் பிரவேசிக்கும் பெண்கள் எரிந்து போவதும் இரத்தம் பட்ட விவசாயியின் கண்கள் பார்வை இழந்ததுமாகும்.
மஹான் ஷெய்குதாஊத் வலீ அவர்கள் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் அனந்தம் அவற்றில் ஒரு சிலதை மட்டும் இங்கு எழுதுகி​றேன்.
“கஸீதத்துல் வித்ரிய்யஹ்”என்னும் நபீ புகழ்காப்பியத்தை யாத்தவரும் பீர் முஹம்மது வலிய்யுல்லாஹ் அவர்களிடம் அற்புத “பைஅத்” ஞானதீட்சை பெற்றவரும் “ஷரீஅத்புலி”என்று அறிஞர்களால் போற்றிப் புகழப்பட்டவருமான மஹான் “மாதிஹுர் றஸூல்” சதகதுல்லாஹ் அப்பா அவர்களுக்கு ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் மீது ஒரு சந்தேகம் ஏற்பட்டது நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்திலுள்ள ஒருவர் பாரதநாட்டுக்கு எவ்வாறு வந்தார்? அவர் ஒரு வலீயாக இருப்பாரா? இதுவே அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம். ஒரு நாள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் இச் சந்தேகத்துடனே​யே ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்ஹாவுக்கு வந்தார்கள். அங்கு வந்த சதகதுல்லாஹ் அப்பா,ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் ​​பேரில் ஒரு “​யாசீன்” கூட ஓதாமல் தர்ஹா கட்டடத்தின் ஒருபுறம் உறங்கிவிட்டார்கள். அன்றிரவு அப்பா அவர்களின் கனவில் தோன்றிய ஷெய்குதாஊத் வலீ அவர்கள் தங்களின் வேலையாட்களை அழைத்து சதகதுல்லாஹ்அப்பாவைப் பிடித்து இறுக்கமாக அழுத்துமாறு பணித்தார்கள்.வேலையாட்களும் அவ்வாறேசெய்தனர். இதனால் சதகதுல்லாஹ் அப்பா அவர்களின் வயிறு கனவிலேயே வீங்கிப்போய்விட்டது. அப்பா அவர்கள் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ்விடம் என்னை இறுக்கமாக அழுத்துமாறு வேலையாட்களைப் பணித்ததேன்? என்று கேட்டார்கள். அதற்கு மஹான் அவர்கள் நீங்கள் என்மீது சந்தேகம் கொண்டீர்கள். நான் நபீ மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட “தவ்றாத்”​ வேதத்தைப்படித்துள்ளேன். அதில் கூறப்பட்டுள்ள நபீ முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி அறிந்து அவர்களைக்கொண்டும் ஈமான் விசுவாசம் கொண்டுள்​ளேன் என்று சொன்னார்கள் இதைக்கேட்ட அப்பா அவர்கள் மன்னிப்புக்கேட்டு கனவிலேயே ஒரு யாஸீன் ஓதினார்கள் கனவுமுடிவதற்குள் வயிறு சுருண்டு வருத்தமும் நீங்கியது.
சென்னை நகரில்​ ஒரு முஸ்லிமுக்கு ஆங்கில மருந்துக்கடை ஒன்று இருந்தது. நாட்டிலுள்ள டொக்டர்களிற் பலர் அங்கு சென்று மருந்து வாங்குவது வழக்கம் அவர்களில் டொக்டர்​​ ஷெய்குதாஊத் என்பவரும் ஒருவர் அவர் தனது பெயர் ஷெய்குதாஊத் என்றும் தனது ஊர் முத்துப்​​பேட்டை என்றும் முகவரி கொடுத்திருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக அக்கடையில் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். ஒரு நாள் மருந்துக்கடைகார முஸ்லிம்முத்துப்பேட்டையில் உள்ள தனது நண்பன் வீட்டுக்குச்செல்ல விரும்பி சென்னையில் இருந்த தனது குடும்பத்துடன் முத்துப்பேட்டை சென்றார். அவர் நண்பனின் வீட்டில் தங்கியிருந்த போது தனது கடையில் மருந்து எடுக்கும் ஷெய்குதாஊத்டொக்டர் பற்றியும் அவரின் இல்லம் பற்றியும் வினவினார். முத்துப்பேட்டை ஷெய்குதாஊத்என்ற பெயரில் எந்த ஒருடொக்டரும் இல்லை என்று நண்பன் கூறினான். கடைக்காரன்தனது நண்பனிடம் அவர் தனது கடைக்கு 15 வருடங்களாக வந்து போவதாகவும் பெருமளவு மருந்துகள் எடுத்து செல்வதாகவும் தனது முகவரி முத்துப்பேட்டை என்று சொன்னதாகவும்கூறினார். அதற்கு அந்த நண்பன் நான் முத்துப்​பேட்டையில் பல்லாண்டுகளாகஇருக்கி​றேன். இங்கு ஷெய்குதாஊத் என்ற பெயரில் எந்தஒரு டொக்டரும் இல்லை. ஆனால் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் என்று ஒரு மஹான் சமாதி கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒரு​ வைத்தியமேதை என்று வரலாறு கூறுகின்றது. அவர்களின் தர்ஹாவுக்கு பல நோயாளர்கள் வந்து கனவிலும் விழிப்பிலும் சிகிச்சை பெற்று செல்வார்கள். உங்களின் கடைக்கு டொக்டர்​வேடத்தில் அவர்கள்வந்திருக்கலாம் என்று கூறினார். இதைக்கேட்ட கடைக்காரன் அக்கணமேஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ்அவர்களின் தர்ஹாவுக்கு விரைந்து சென்று ஸலாம் கூறுமுன் அங்கிருந்து நீ தேடும் ஷெய்குதாஊத் நான் தான் என்று ஓர் அசரீரி கேட்டது. அவ்வளவுதான் கடைக்காரன் அக்கணமே மயக்கமுற்று கீழே விழுந்தான் சில நிமிடங்களின் பின் தெளிவுபெற்று நடத்தை அங்கு கூடி நின்றவர்களிடம் கூறினர்.
​​ ஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ்அவர்கள் அண்மையில் நிகழ்த்திய ஓர் அற்புதத்தை இங்கு தருகி​றேன். அமெரிக்காவில் மிகப்பிரசித்தி பெற்ற மருத்துவமனை யொன்றில் சத்திரசிகிச்சை நிபுணராக வேலை செய்து கெண்டிருந்த ஒரு வெள்ளைக்கார டொக்டரின் முகத்தில் மச்சம் போன்ற கறுப்புப்புள்ளி ஒன்று ஏற்பட்டது. நாட்செல்லச்செல்ல அது படரத்தொடங்கியது. அவரின் அழகிய முகத்தை அது அசிங்கப்படுத்தியது. அவருடன் வேலைசெய்து கொண்டிருந்த ஏனைய டொக்டர்கள் அவரை ஏளனம் செய்யத்தொடங்கினர் இதனால் மனமுடைந்தடொக்டர் தன்னைவிட அனுபவத்திலும் கூடிய வைத்திய நிபுணர்களிடம் மருந்து​​செய்தார்​ சுகம்கிடைக்கவில்லை.​ ஒருநாள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒருவரலாற்று நூலை வாசித்தார் அதில் இந்தியாவில் தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை எனும் கிராமத்தில் தீராதநோய்களை சுகப்படுத்தும் வைத்தியமேதை ஒருவர் இருக்கிறார். என்றகுறிப்பு இருந்தது. இதைக்கண்ட டொக்டர் வியந்தவராக அமெரிக்காவில் இன்னொரு மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நிபுணராக வேலைசெய்து கொண்டிருந்த இந்தியாவின் டில்லி நகரைச்சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு தான்கண்ட குறிப்புபற்றி வினவினார். அதற்கவர் அப்படி ஒரு வைத்தியமேதை இருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் வேறுவிபரம் ஒன்றும் தனக்குத்தெரியாதுஎன்றும்கூறினார். இருவரும் இந்தியாவுக்குச்சென்று அந்த வைத்திய மேதையைக்காண வேண்டுமென்று முடிவு செய்து விமானம் மூலம் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்து வினவினர். அவர்களுக்கு ஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ் பற்றிக்கூறப்பட்டது. இருவரும் முத்துப்பேட்டைக்கு வந்து நாயகமவர்களின் தர்ஹாவுக்கு சென்று பணிவோடும் பக்தியோடும் மனமுருகப் பிரார்த்தனைசெய்துவிட்டு அன்றிரவு அங்​கேயே உறங்கினார்கள். அதே இரவு நோயாளியான டொக்டரின் கனவில் தோன்றிய ஷெய்குதாஊத் நாயகமவர்கள் தனது சமாதியில் எரிந்துகெண்டிருக்கும் விளக்கில் உள்ள எண்ணை கொண்டு நோயுள்ள இடத்தில் பூசுமாறு பணித்தார்கள். கண் விழித்த டொக்டர் பணிக்கப்பட்டவாறு செய்தார். அன்று மாலைக்குள் இருந்த இடம்​தெரியாமல் அந்த கறுப்புப்பள்ளி மறைந்து போய்விட்டது. இது கண்டு வியந்து இரு சத்திரசிகிச்சை​​ நிபுணர்களும் நாயகமவர்களின் சமாதியில் விழுந்து முத்தங்கள் சொரிந்து தம்மாலான அன்பளிப்புக்கள் வழங்கிவிட்டு​சென்றனர்.​
வலீமார்களுக்கு இத்தகைய “கறாமத்” அற்புதமும் இதைவிட சக்தி மிக்க அற்புதமும் உண்டு. என்பதற்கு திருக்குர்ஆனிலும் நாயகவாக்குகளிலும் அநேக ஆதாரங்கள் உள்ளன.நபீ (ஈஸா) அலை அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களுக்கு மாரிகாலத்தில் கோடைகால உணவும் கோடைகாலத்தில் மாரிகால உணவும் சுவர்க்கத்திலிருந்து கிடைத்த வரலாறும் “அஸ்ஹாபுல் கஹ்பு” குகைவாசிகள் ஊண்,குடிப்பு எதுவுமின்றி 309 ஆண்டுகள் தொடராக உறங்கிவிட்டு எந்த ஒருநோய்நொடியுமின்றி ஆரோக்கியமானவர்களாக கண்விழித்த வரலாறும் வலீமாரின் “கறாமத்”அற்புதத்தை நிரூபித்து நிற்கும் திருக்குர்ஆன் ஆதாரங்களாகும்.
இறைவன் நபீமார்களிற் சிலரை வேறுசிலரைவிட சிறப்பாக்கி வைத்திருப்பது போல வலீமார்களையும் வைத்துள்ளான். அவர்களிற் சிலர் மறுசிலரைவிட சிறப்பானவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தமது தராதரத்திற்கேட்ப குத்பு, அப்தால், அவ்தாத், நுஜபாஉ, நுகபாஉ,என்றெல்லாம் அழைக்கப்படுவார்கள்.
வலீமார்களின் தலைவர்“குத்பு” என்று அழைக்கப்படுவார். இவர்“கவ்து” என்றபெயராலும் அழைக்கப்படுவார். இவர் ஒரே ஒருவர் மட்டுமே இருப்பார் “முக்தாறூன்” என்ற பெயரில் மூன்று பேர்களும்“அவ்தாத்” என்ற பெயரில் நான்கு​​ பேர்களும் “அன்வார்” என்ற பெயரில் ஐவரும் “உறபாஉ” என்ற பெயரில் ஏழு பேர்களும் “நுஜபாஉ” என்ற பெயரில் எழுபதுபேர்களும் “நுகபாஉ” என்ற பெயரில் முன்னூறு பேர்களும் சமகாலத்தில்​இருப்பார்கள்.
டொக்டர்களில் ஒவ்வொரு வியாதிக்கும் விஷேட திறமை பெற்ற ஸ்பெஷலி​ஸ்ட் இருப்பது போல் வலீமார்களிலும் இருக்கிறார்கள். இவர்களிற் சிலர் பைத்தியத்திற்கு ​விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு ஏர்வாடியில் சமாதிகொண்டுள்ள ஏந்தல் இப்றாஹீம் ஷஹீத் வலிய்யுல்லாஹ்அவர்களை உதாரணமாகக் கெள்ளலாம். இன்னும் சிலர் சூனியத்தை வெளிப்படுத்தி அதனால் பாதிக்கப்பட்டவர்களைச் சுகப்படுத்துவதில் விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் பாதுஷாஅவர்களை உதாரணமாகக் கெள்ளலாம். இன்னும் சிலர் சகல நோய்களுக்கும் விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு ஹகீம்ஷெய்கு தாஊத் வலீயுல்லாஹ்அவர்களை உதாரணமாகக் கெள்ளலாம்.
வலீமார் என்போர் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்னும் நான்கு கடல்களிலும் குளித்துஉள்ளக்கறைளான பெருமை பொறாமை மமதை அகங்காரம் ஆணவம் ​போன்ற தீக்குணங்கள் மனதைவிட்டு அகற்றி அதைச்சுத்தப்படுத்தி செயல்பட்டவர்களாவர். இதனால்தான் அவர்களுக்கு கறாமத் என்னும் அற்புதம் நிகழ்த்தும் வல்லமை அல்லாஹ்வினால் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தியா, இலங்கை, பா​கிஸ்தான்,பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும்ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவு தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments