Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?

சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?

மௌலவீ HMM. இப்றாகிம் நத்வீ

எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். 

அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். 
பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று நவின்றார்கள். 
இந்த நபீ மொழியில் இருந்து “ லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் ” என்று நம்பி, மொழிந்து வழி நடந்தவர்களான நபீகள் நாதரின் “ உம்மத் ” சமூகத்தவர்தான் 72 கூட்டமாக பிரிவார்கள் என்றும், அவர்களில் ஒரு கூட்டம்தான் சொர்க்கம் நுழையும் என்றும், ஏனைய எழுபத்தொரு கூட்டத்தவரும் நரகில் நுழைவார்கள் என்றும் சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டம் நபீகளின் – அவர்களின் தோழர்களின், குடும்பத்தவரின் வழி நடந்தவர்கள் என்றும் தெளிவாகிறது.

இதில் வியப்பும் அதிசயமும் என்னவெனில் கலிமஹ்வை ஏற்ற எழுபத்திரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டம் மட்டும் நேர்வழி பெற்று சொர்க்கம் நுழையும் என்று குறிப்பிட்டதாகும். 
இன்று எமது நாட்டை மட்டுமல்ல உலகைப் பார்க்கும் போது இஸ்லாமியரிடையே பலதரப்பட்ட கொள்கையுடையோர் காணப்படுகின்றனர். ஒவ்வொரு கூட்டத்தவரும் தாம் சொல்லும் கொள்கை குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதாகவே சொல்கின்றனர். எமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக செய்துவந்த “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை அனுட்டானங்களை மறுக்கின்றனர். அவை இஸ்லாத்திற்கு முரணான ஷிர்கான கொள்கை என்றும் அவற்றைப் பின்பற்ற கூடாதென்றும் பகிரங்கப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே ஆதாரம் எடுக்க வேண்டும் என்றும் இஜ்மாஉ, கியாஸ் ஆகியவை இஸ்லாமிய மூலாதாரங்களல்ல என்றும் பறைசாற்றுகின்றன. 
இன்னோரின் கூற்றுக்களை நாமும் சீர்தூக்கிப் பார்த்திடும் போது நபீகள் சொல்லி வைத்த 71 கூட்டத்தவர்கள் இவர்கள்தான் என்பது தெளிவாகிறது. இந்த 71 கூட்டத்தவர்களும் இன்று எழுபத்தோராயிரம் கூட்டங்களாக பிரிந்துள்ளனர். 
மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாதென்றும் அம்மத்ஹபுகளின் இமாம்கள் வழிகேடர்கள் என்றும் இவர்கள் சொல்வது விந்தையும், வியப்புக்குரியதுமாகும். நபீகள் (ஸல்) அவர்கள் எனது ( சொல், செயல், நடைமுறை – வழிமுறை ) சுன்னத்தைப் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள். இன்னும் குலபாஉர்றாஷிதீன்களின் சுன்னத்தையும் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். 
வழிகேடர்களின் கருத்து சரியெனில் எனது சுன்னஹ்வை மட்டும் பற்றிப் பிடியுங்கள் என்று மட்டும் நபீகள் திலகம் சொல்லியிருக்க வேண்டும். 
குலபாஉர்றாஷிதீன்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னது மத்ஹபுகளை – இமாம்களை இஜ்மாஉ – கியாஸ் போன்றவற்றையும் பின்பற்றுங்கள் என்று சொன்னதாகும். 
எனவே அன்றும் இன்றும் நடைமுறையிலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை கிரியைகளை பின்பற்றி நடப்பது மேற்கூறப்பட்ட ஹதீதின் ஆதாரப்படி இஸ்லாம் ஏற்ற கொள்கை, கிரியை என்பதை நாம் விளங்குவதுடன் அதை ஏற்று நடப்போரே நபீகள் (ஸல்) சொர்க்கம் நுழையும் ஒரு கூட்டம் என்று குறிப்பிட்டோருமாகும். 
இதற்கு மாற்றமாக நடப்போரை அவர்கள் கோடிக்கணக்கில் இருப்பினும் நபீகள் குறிப்பிட்ட எழுபத்தொரு கூட்டத்தவராகும். 
எனவே, நாம் வழிகேடர்களின் போலி கூச்சலுக்கு ஏமாந்து போகாமல் இஸ்லாத்திற்கு முரணான அவர்களது நவீன கொள்கையை ஏற்காமல் நாமும் எமது முன்னோரும் வழி நடந்த சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து அக்கொள்கையில் மரிப்போமாக. 
இறைவன் எம்மனைவரையும் நபீகள் திலகம் முஹம்மது (ஸல்) அவர்களையும் அவர்களது குடும்பத்தவரையும் தோழர்களையும் அவ்லியாஉகளான இறைநேசர்களையும் நேயம் வைத்து வாழ்ந்தவர்களாக ஆக்குவானாக மறுமையில் அவர்களுடன் இருப்பதற்கு அருள் புரிவானாக ! 
ஆமீன் !
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments