Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உறக்கம் “வுழூ”வை முறிக்குமா?

உறக்கம் “வுழூ”வை முறிக்குமா?

தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
 
“வுழூ”என்றால் ஒருவன் “ஷரீஆ”வில் கூறப்பட்ட முறைப்படி – விதிப்படி – தனது உறுப்புகளில் குறிப்பிட்ட சில உறுப்புகளை கழுவுவதை குறிக்கும்.
 
உதாரணமாக முதலில் “வுழூ”வின் “பா்ழை” இறுக்குகின்றேன் என்று “நிய்யத்” வைத்தல். அதாவது இவ்வாறு மனதில் நினைத்தல். இரண்டாவது இந்த எண்ணத்தோடு முகம் கழுவுதல். மூன்றாவது இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவுதல். நாலாவது தலையை நீரால் “மஸ்ஹ்” தடவுதல். இரு கால்களையும் கரண்டை உட்பட கழுவுதல். சொன்ன முறைப்படி செய்தல்.

இவ்வாறு செய்தால் “வுழூ” என்ற சுத்தம் உண்டாகி விடும். இது தொடா்பான மேலதிக விபரம் தேவையானோர் “ஷாபிஈ மத்ஹப்” சட்டம் தெரிந்த “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழிசெல்லக் கூடிய ஒருவரிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். “வுழூ” செய்யாமலும் இருந்தாலும் இதற்கான சட்டத்தை “மத்ஹப்” வழி நடக்காத வஹ்ஹாபிகளிடம் கேட்டறியக்கூடாது. அவா்கள் அந்தகா்கள். அந்தகன் வழி காட்ட லாயிக்கற்றவன்.
 
தொழுவதற்கும், திருக்குர்ஆனை தொடுவதற்கும் இச்சுத்தம் அவசியமானதாகும். இதற்கு மாறாகச் சொல்வோர் – “வுழூ” இன்றி அல்குர்ஆனை தொடலாம் என்போர் – நபி வழி தெரியாத  விழி கண் குருடா்கள். இவா்கள் நல்வழி பெற வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் இவா்களின் கண் திறக்கும். இன்றேல் குருடா்களாகவே வாழ்ந்து குருடா்களாகவே செத்துப் போக நேரிடும்.
 
ஒருவன் உறங்கு முன் “வுழூ”என்ற சுத்தம் செய்து கொள்வது “ஸுன்னத்”நபீ வழி ஆகும். இவ்வாறு செய்தவன் உறக்கத்திலிருந்து விழிக்கும் வரை “வுழூ” என்ற வணக்கத்துடன் உறங்கினவனாக கருதப்படுவான். அதற்கான நன்மை கிடைக்கும். அந்த உறக்கத்தின் போது அவன் மரணித்தால் “வுழூ” உடன் மரணித்ததற்கான நன்மையை பெற்றுக் கொள்வான்.
 
“வுழூ” உடன் உறங்கும் ஒருவனின் “வுழூ” விழிக்கும் வரை வரை முறிந்து விடாது. எப்போது விழிக்கின்றானோ அப்போதுதான் அது முறியும். “வுழூ” என்பது உறக்கத்தை கொண்டு முறிந்து விடாது. உறக்கத்தைக் கொண்டு . “வுழூ” முறிந்து விடு மென்றால் உறங்கு முன் “வுழூ” அர்த்தமற்ற செயலாகி விடும். அா்த்தமுள்ள இஸ்லாம் அா்த்தமற்ற செயல் கொண்டு எவரையும் பணிக்காது.
 
ஒருவன் உறக்கத்தில் இருக்கும் வரை அவனிடம் “அன்னிய்யதுன்” என்ற தன்னுணர்வோ, “அனானிய்யத்” என்ற கா்வ உணர்வோ இருக்காது. எப்போது உறக்கத்தில் இருந்து விடுபடுகின்றானோ, துயிலுலகில் இருந்து “துன்யா”என்ற பொய்யுலகுக்கு வருகின்றானோ அப்போதே அவனிடம் “அன்னிய்யத்” என்ற தன்னுணா்வு வந்து விடும்.
 
ஒருவனிடம் தன்னுணா்வு இருப்பது பெரும்பாகும். அதாவது அப்துல்லாஹ் என்பவன் தன்னை அல்லாஹ்வுக்கு வேறான தனி “வுஜூத்” உள்ளவனாக உணா்வது “ஸூபி”களிடம் பெரும்பாவமாகும்.
 
وَقُلْتُ وَمَا ذَنْبِيْ فَقَالَتْ مُجِيْبَةٌ       وُجُوْدُكَ ذَنْبٌ لَا يُقَاسُ بِهِ ذَنْبٌ
 
பாவமே செய்யாத பக்திமான் ஒருவன் நான்
என்ன பாவம் செய்தேன்? என்று தன்னைத் தானே கேட்டான்.
அதற்கு அவனின் மனச்சாட்சி நீ
ஒருவன் இருப்பதாக உணா்கின்றாயே அதுவே
பெரும் பாவம் என்று அது கூறியது.
 
ஓா் இறைஞானி
நான் என்றிருந்தேனே!
நாளும் கழிந்தேனே!
தானாயிருந்த தன்மை அறியேனே
 
என்று வேதனையுடன் புலம்பியழுகின்றார்.
 
ஒருவன் உறக்கத்தில் இருக்கும் வரை அவனிடம் “நான்” என்ற உணா்வு இல்லாமற் போவதால் அவனின் “வுழூ” முறிந்து விடாது. அவன் உறக்கத்திலிருந்து விடுபட்டவுடன் அவனிடம் அந்த உணா்வு வந்து விடுவதால் அவனின் “வுழூ” முறிந்து விடுகின்றது.
 
எவன் எப்போது “வுழூ” செய்தாலும் அவனிடம் “நான்” என்ற உணா்வு இல்லாமலிருக்கும் வரை அவனின் “வுழூ” முறிந்து விடாது. இது ஸுபிஸ வழி செல்பவா்களுக்கான கருத்தாகும்.
 

 

ஒருவன் “நான்” என்ற உணா்வு தனக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்வது கடினமாயினும் அயராத பயிற்சி மூலம் அந்த இடத்தை அடைந்தவன்தான் மனிதன்.
 – ஷாஹே ஷரன்தீப் –

————————————————————

اَلنَّوْمُ مَعَ الْوُضُوْءِ دَيْدَنُ الْأَنْبِيَاءِ وَالْأَوْلِيَاءِ وَالصَّالِحِيْنَ،
“வுழூ” செய்து கொண்டு உறங்குதல் நபீமார், வலீமார், மறறும் நல்லடியார்களின் வழக்கமாகும்.

ஒருவன் “வுழூ” செய்து கொண்டு இரவு 10 மணிக்கு உறங்கி அதிகாலை 04 மணிக்கு விழித்தானாயின் அவன் உறங்கிய 06 மணி நேரங்களும் அவன் “வுழூ” உடன் உறங்கியவனாகவே கணிக்கப்படுவான். 06 மணி நேரங்கள் அவன் வணக்கத்தில் இருந்ததாகவே கணிக்கப்படும்.

ஒருவன் “வுழூ” செய்து அந்த “வுழூ” முறியாமல் இருக்கும் போது மீண்டும் “வுழூ” செய்வதால் முந்தின “வுழூ” செயலற்றதாய்விடும். இவ்வாறு செய்தல் “தஜ்தீதுல் வுழூஇ” “வுழூ”வை புதுப்பித்தல் எனப்படும். تجديد الوضوء سنة “வுழூ”வை புதுப்பித்தல் ஸுன்னத் என்று “ஷரீஆ” சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் ஏற்கனவே எடுத்த “வுழூ” முறியாமல் இருந்தாற் கூட மீண்டும் “வுழூ” செய்தல் “ஸுன்னத்” ஆனதேயாகும்.

உறங்குவதன் மூலம் “வுழூ” முறியுமாயின் உறங்குவதற்காக “வுழூ” செய்தல் வீணான செயலாகிவிடும். எனவே, “வுழூ” செய்து கொண்டு உறங்குபவன் எப்போது கண் விழிக்கின்றானோ அப்போதுதான் அவனின் “வுழூ” முறியும். உறக்கத்தில் இருக்கும் வரை “வுழூ” முறிந்துவிடாது.

“வுழூ” செய்து கொண்டு உறங்குபவன் கண் விழிப்பதன் மூலம் அவனின் “வுழூ” முறிந்துவிடும் என்று சொல்வதை விட அவ்வாறு உறங்குபவன் தனது உறக்கத்திலிருந்து விடுபட்டால் “வுழூ” முறியும் என்று சொல்வதே மிகப் பொருத்தமானதாகும். ஏனெனில் “வுழூ” உடன் உறங்கும் ஒருவன் உறக்கத்திலிருந்து விடுபடாமலேயே கண் திறக்க சாத்தியமுண்டு. உறக்கத்தலிருந்து விழித்தல் என்பதும், உறக்கத்திலிருந்து விடுபடுதல் என்பதும் ஒன்றுதானா என்று விலங்கியல் மேதைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் அவர்களின் கருத்துக்கே முன்னுரிமை கொடுக்கவும் வேண்டும். وَلِكُلِّ فَنٍّ رِجَالٌ

ஒவ்வொரு தொழுகைக்காகவும் “வுழூ” செய்து கொள்ளுதல் ஏற்கனவே செய்த “வுழூ”வுடன் தொழுவதை விடச் சிறந்ததாகும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களிற் பலர் ஒரே “வுழூ”வுடன் பல நாட்கள் இருந்ததற்கும், பல மாதங்கள் இருந்ததற்கும் ஆதாரங்கள் உள்ளன.

كان الشّيخ محي الدين ابن عربي رضي الله عنه مَكَثَ ثَلَاثَةَ أَشْهُرٍ بِوُضُوْءٍ وَاحِدٍ
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரே “வுழூ”வுடன் மூன்று மாதங்கள் இருந்தார்கள் என்று அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

“வுழூ”வுடன் உறங்கியவன் உறக்கத்திலிருந்து விடுபட்டால் “வுழூ” முறிந்துவிடுமென்றும், மல சலம் கழிப்பதால் “வுழூ” முறியுமென்றும், “மஹ்றம்” அல்லாத அன்னிய பெண்களின் உடல் திரையின்றிப் பட்டால் “வுழூ” முறியுமென்றும், ஒருவனின் உள்ளங்கைப் பகுதி ஆண்குறியில் படுவதால் “வுழூ” முறியுமென்றும் “ஷரீஆ”வின் சட்டம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றை முற்றாகத் தவிர்த்து மூன்று மாதம் இருப்பதானது வியப்பான ஒன்றேயாகும். அல்லாஹ் தனக்கு விருப்பமான பல மகான்களுக்கு அத்தகைய சிறப்பை வழங்கியுள்ளான். இச்சிறப்பு அவர்களின் ஆன்மீக பலத்திற்காக அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய பரிசில்கள் என்றே சொல்ல வேண்டும்.

அரசியல் அதிகாரத்தால், அரண்மனைப் பலத்தால், மக்கள் பலத்தால் சாதிக்க முடியாதவற்றையெல்லாம் ஆன்மிக பலத்தால் சாதிக்க முடியும் என்பதற்கு நபீமார், வலீமார், நல்லடியார்களின் அற்புத வாழ்வு ஆதாரமாக உள்ளது.

திருச்சியில் சமாதி கொண்டு தீர்க்க முடியாத நோய்களையும், தொல்லைகளையும் தீர்த்து வருகின்ற தப்லே ஆலம் பாதுஷாவினதும், நாஹூர் ராஜா பாதுஷா அவர்களினதும், இன்னும் பல அவ்லியாஉகளினதும் அற்புத வாழ்வு ஆதாரமாக உள்ளது. தேடியறிந்தோர் தேனைப் பழித்த பேரின்பம் அடைவர்.

ஒரே “வுழூ” உடன் தொடர்ந்து பல நாட்கள் இருப்போர் இன்றுமுளர். முன்னூற்றொன்பதாண்டுகள் தொடராக உறங்கியும் எந்த ஒரு நோயாலும், உடல் மாற்றங்களாலும் பாதிக்கப்படாத, திருக்குர்ஆன் கூறுகின்ற “அஸ்ஹாபுல் கஹ்ப்” குகைவாசிகளின் வரலாறு ஆன்மீக பலத்தை உணர்த்தும் பெரும் ஆதாரமாகும்.

உலகம் முழுவதும் இஸ்லாம் பரவியதற்கும், ஆன்மிகம் ஒளிர்ந்ததற்கும் ஆன்மிக வாதிகளின் சாதனைகளும், போதனைகளும், அற்புதங்களுமே அடிப்படைக் காரணங்களாக இருந்தன.

இன்று ஆன்மிகத்தின் மணத்தைக் கூட நுகர முடியாத அளவு அது மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் விட்டன. ஆன்மிகம் குழியிலடப்படுவதற்கு வஹ்ஹாபிஸம் மட்டும் காரணமல்ல. ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் மௌனமும், அவர்களின் அக்கறையற்ற போக்கும், தம்மை வளர்த்துக் கொள்ள ஆன்மிகப் போர்வையில் வாழும் தரீகாவின் ஷெய்குமார்களுமேயாவர். حُبُّ المالِ ، حبُّ الجاهِ، حُبُّ النِّسَاءِ போன்ற அசூசிகளில் இவர்கள் விழுந்து போனதே இதற்குக் காரணம் எனலாம்.

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
அல்லாஹ்வின் ஒளியான ஞானத்தை – ஆன்மிகத்தை அவர்கள் தமது வாயால் ஊதியணைக்க நினைக்கிறார்கள். இது நடக்காது. அல்லாஹ் தனது ஒளியை ஒளிரச் செய்து கொண்டே இருப்பான். “காபிர்”கள் வெறுத்தாலும் சரியே!

அன்புக்குரிய ஆன்மிகவாதிகளே!

ஆன்மிகத்தைக் கட்டியெழுப்ப அணி திரளுங்கள். இவ்வுலக வாழ்வுதான் நிரந்தர வாழ்வு என்ற பேதமைச் சிறையிலிருந்தும், சிந்தனையிலிருந்தும் வெளியேறுங்கள்.

சாத்திர வேதம் சத கோடி கற்றாலும்
சமய நெறிகளி னாசாரம் பெற்றாலும்
பாத்திர மேந்திப் புறத்திலலைந்தாலும்
பாவனை யாலுட லுள்ளமுலைத்தாலும்
மாத்திரை யேனு மெமன் வருமப்போது
மற்றொன் றுதவா துதவா துதவாது
சூத்திரமாகிய தோணி கவுழு முன்
சுக்கானை நேர்படுத்திக் கணமே சொன்னேன்.

முற்றும்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments