Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முப்பெரு நாதாக்கள்

முப்பெரு நாதாக்கள்

மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) (BBA)

இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் பஹ்றுல் ஹகாஇகி வத்தகாஇக் . அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள்

அஷ்ஷெய்க் அஹமது மீரான்“வெள்ளி ஆலிம்” (வலீ)அவர்கள் 

ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள்.

இலங்கையில் இஸ்லாமியப் பணிபுரிந்த பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணத்தின் கம்பெனியார் குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ.ஏ.கே. அகமது முஹ்யித்தீன், முகம்மது இப்றாஹீம் நாச்சி தம்பதியினருக்கு கடைசிக் குழந்தையாய் பிறந்தார்கள்.

காயல்பட்டணத்தில் தனது ஆரம்பக்கல்வியை முடித்த இவர்கள் ஒரு ஹாபிழாக வரவேண்டும் என்ற பெற்றொரின் விருப்பப்படி ஒரு ஹிப்ழு மத்ரஸாவில் சேர்க்கப்பட்டார்கள்.

எட்டு ஜுஸூக்களை மன்னமிட்ட இவர்களுக்கு ஒர் ஆலிமாக வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் சென்னை ஜமாலிய்யஹ் அறபுக் கல்லூரியில் சிறிது காலம் ஓதிவிட்டு அங்கிருந்து இறைநேசர் அப்துல் கரீம் ஹஸ்ரத் அவர்கள் அதிபராகக் கடமையாற்றிய பொதக்குடி அந்-நூறுல் முஹம்மத்திய்யஹ் அறபுக் கல்லூரியில் சேர்ந்து கற்றுவந்தார்கள்.

அக்கல்லூரியிலேதான் தனது நண்பரான இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்த “வெள்ளி ஆலிம்” என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அகமது மீரான் (வலீ) அவர்களை சந்தித்தார்கள்.

இவ்விருவரும் சேர்ந்து அந்த மத்ரஸாவில் கற்றுக் கொண்டிருக்கும்போது ஹைதரபாத் ஞானமாமேதை, இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பொதக்குடி நூறுல் முகம்மதிய்யஹ் மத்ரஸாவில் சில நாட்கள் தங்கிய சங்கைக்குரிய ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி (றஹ்) அவர்கள் அக்கல்லுரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மகான் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்ளையும் அவரது தோழர் மகான் அகமது மீரான் (வெள்ளி ஆலிம்) ஆகிய இருவரையும் கல்வி கற்று முடிந்தபின் தன்னை ஹைதராபாத்தில் வந்து சந்திக்கும் படி கூறினார்கள்.

இஸ்லாமியக் கல்வியைப் பூர்த்தி செய்த இவ்விருவரும் ஷெய்க் அவர்களின் அழைப்பை ஏற்று ஹைதரபாத் செல்லும் முன் “நாங்கள் தங்களை சந்திக்க வரலாமா” என்று அனுமதி கேட்டு ஒரு கடிதத்தை மகான் ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்களுக்கு அனுப்பினார்கள்.

அதற்கு சங்கைக்குரிய மகான் அவர்களிடமிருந்து “ எனது கதவு தங்களுக்காக திறந்துள்ளது” என்று பதில் வந்தது.மகான் அவர்களின் அழைப்பினை ஏற்று தோழர்கள் இருவரும் ஹைதரபாத் சென்று மகான் ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்களிடம் இறைஞானத்தைக் கற்றுத் தேர்ந்த்ததுடன் இவர்கள் இருவருக்கும்மகான் அவர்கள்“பைஅத்” செய்து கிலாபத்தும் வழங்கி தனது கலீபாக்ளை இறை பணிக்காக அனுப்பிவைத்தார்கள்.

இவ்விருக்கும் ஷெய்க் அவர்களின் வஸிய்யத் “நீங்கள்இஸ்லாமிய பணி புரியவேண்டும்” என்பதாக இருந்தது.அஹமது மீரான் வெள்ளி ஆலிம் (றஹ்) அவர்கள் தனது தாயகமான இலங்கை திரும்பி அவர்களின் சொந்த இடமான கிழக்குமாகாணத்தில் பல ஊர்களிலும் சிறிய மையங்ளை நிறுவி மக்களுக்கு இறை போதனை செய்வதிலும் தனித்திருந்து, இறை தியானம்செய்வதிலும்(கல்வத்)  வாழ்கையை கழித்தார்கள்.

21-02-1898ல் பிறந்த அஹமது மீரான் வெள்ளி ஆலிம் (றஹ்) அவர்கள் 10-02-1952 ல் வபாத்தானார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

காயல்பட்டணம் திரும்பிய மகான் அப்துல் காதிர் ஸூபி நாயகம் அவர்கள் 1930ம் ஆண்டு அப்துல்லாஹ் நாச்சியார் என்பவரை மணம் முடித்தார்கள்.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அவர்களின் ஷெய்கு சங்கைக்குரிய ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் “உனக்கு இன்னொரு மாலை காத்திருக்கின்றது” என்று கூறி விட்டுச் சென்றார்கள் அவர்கள் கூறியதன் அர்த்தம் யாருக்கும் அப்போது புரியவில்லை.

சில ஆண்டுகளில் ஒர் ஆண்குழந்தையை பெற்றெடுத்த அப்துல்லாஹ் நாச்சியார் நோய் காரணமாக இறையடி சேர்ந்தார்கள். அப்பொழுது மகான் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் தனது மனைவியின் சகோதரி மஹ்தும் பாத்திமா நாச்சியாரை திருமணம் செய்தார்கள்.

அப்போதுதான் அவர்களுக்கு தனது ஷெய்கு ஹைதரபாத் ஸூபி நாயகம் அவர்கள் கூறியதன் அர்த்தம் புரிந்தது. தனக்கு இன்னும் ஒரு திருமணம் நிகழும் என்பதையே முதல் திருமணத்தில் கலந்து கொண்ட தனது ஷெய்கு ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் சொல்லியிருந்தார்கள்.

இத்திருமணத்தில் மூன்று பெண் குழந்தைகள் கிடைத்தன. இவர்கள் தனது குடும்பதினரின் தொழிலை கவனிப்பதற்காக முதலில் சென்னைக்கு அனுப்பப்பட்டார்கள்.

மகான் ஸூபி ஹஸ்ரத் அவர்களின் அந்த வருட வியாபாரத்தில் பாரிய நட்டம் ஏற்படவே மீண்டும் தனது குடும்ப வணிகத்தை செய்ய காயல்பட்டணம் திரும்பினார்கள்.

காயல்பட்டணத்திலும் அவர்களின் வியாபாரம் பாரிய நட்டமடைந்தது, இவ்வாறு சில வருடங்கள் தாங்களின் வர்த்தகத்தில் பாரிய நஸ்டம் தொடர்ச்சியாக ஏற்படவே, மகான் அவர்கள் தனது ஷெய்கு ஹைதரபாத் ஸூபி நாயகம் அவர்களின் வஸிய்யத்தை ஞாபகப்படுத்தி இறை பணிபுரிவதற்காக தனது நண்பரைத் தேடி இலங்கைக்கு பயணமானார்கள்.

1946ம் ஆண்டு இலங்கையை வந்தடைந்த மகான் அவர்கள் தனது நண்பரை சந்தித்து மட்டக்களப்பில் “கிரான்குளம்” எனும் ஊரில் சுமார் ஒன்றரை மாதங்கள் தனது நண்பர் வெள்ளி ஆலிம் அவர்களுடன் சேர்ந்து இறை தியானத்தில்(கல்வத்) இருந்தார்கள்.

பின்னர் கொழும்பு, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் பல பகுதிகளில் இறைபணி புரிந்தார்கள்.

மீண்டும் தாயகம் திரும்பிய மகான் அவர்கள் காயல்பட்டணம் சென்று “கொடிப்பாளையம்” எனும் இடத்தில் சில காலம் கல்வத்து இருந்தார்கள்.

பின்னர் 1949 ம் ஆண்டு இலங்கை திரும்பிய மகான் அவர்கள் கொழும்பு-11 இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள சம்மாங்கோட்டைப் பள்ளிவாயலில் பேஷ் இமாமாக பணியாற்றினார்கள்.

பின் அங்கிருந்து வெளியேறி இலங்கையிலும் இந்தியாவிலும் மக்களுக்கு இறை போதனைசெய்வதில் ஈடுபட்டார்கள். இதற்காக ஹிஸ்புல்லாஹ் சபை – சூபி மன்ஸில் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆன்மீகப் பணி புரிந்தார்கள்.

இறைஞானத் தாகம் கொண்ட எத்தனையோ உள்ளங்களில் மெஞ்ஞான தீபத்தை ஏற்றியதோடு இஸ்லாத்தில் குழப்பம் செய்தவர்களுக்கு எதிராகவும் குரல்கொடுத்தார்கள்.

இதற்காக பல தத்துவ நூல்களை எழுதி வெளியிட்டார்கள். ஞானதீபம், அஸ்ஸுலூக், அகமியக்கண்ணாடி, அல்ஹக் போன்ற நூல்கள் அவற்றில் சிலவாகும்.

ஆரிபுபில்லாஹ், முஹிப்புர் றசூல், அஷ் ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் புனித ரமழான் பிறை 24ல் வெள்ளிக்கிழமை (16-07-1982) சுப்ஹுக்கு சற்று முன்னர் இலங்கையில் வைத்து நோன்பு நோற்ற நிலையிலேயே இறைவனின் அழைப்பில் தாறுல் பனா எனும்பொய்யுகைவிட்டு தாறுல்பகா எனும்மெய்யுலகை அடைந்தார்கள் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் புனித அடக்கஸ்தலம் இலங்கையில் கொழும்பு-10 குப்பியாவத்தை மையவாடியில் அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments