Friday, March 29, 2024

الله – அல்லாஹ்

– மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) –
الله –  அல்லாஹ் என்ற பெயர் தெய்வீகத்தன்மைகள்
அனைத்தையும் உள்ளடக்கிய யதார்த்தமான உள்ளமைக்குரிய பெயர்.அந்த யதார்த்தமான உள்ளமையாகிய
அல்லாஹ்வைத்தவிர உள்ள மற்ற அனைத்து வஸ்துக்களும் சுயமான உள்ளமை அற்றவையாகும். அவை அல்லாஹ்வின்
யதார்த்தமான உள்ளமையிலிருந்து உள்ளமையை பெற்றவையாகும். அல்லாஹ் என்பது அவனது 99 திருநாமங்களில் அவனது ذات –  உள்ளமைக்குரிய பெயர் மற்றயவை அனைத்தும் அவனது பண்புப்பெயர்கள்.
அல்லாஹ் என்ற பெயர் அவனுக்கு
மாத்திரமே பாவிக்கப்படக்கூடிய பெயர்.இந்த கண்ணியமான பெயரை வேறுயாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும்
பாவிக்கமுடியாது.

அல்லாஹ் ஒருவன், ஒருவன் என்று குறிப்பிடும் போது அது எண்ணிக்கை அடிப்படையில்
அல்ல.எண்ணிக்கை அடிப்படையில்  அல்லாஹ் ஒருவன்
என்று குறிப்பிடும்போது அவன் எண்ணிக்கைக்கு கட்டுப்படவனாகிவிடுகின்றான்.  அவன் தூயவன், ஏகன், இணை துணையற்றவன், அவன்மாத்திரமே இருப்பதால்  அவனுக்கு இணை எதுவுமில்லை. அவன் தன்னைக் கொண்டு
நிலைபெற்றவன்,சிருஷ்டிகள் அனைத்தும் அவனைக் கொண்டே நிலைபெற்றுள்ளன. அவனைப்போல் எதுவுமில்லை.அவனுக்கு
வேறான தெய்வமில்லை. அவனுக்கு வேறான எதுவுமில்லை.அவன் ஆரம்பமற்ற பூர்வீகமானவன்.அவன்
முடிவற்ற நிரந்தரமானவன்.அவன் அழிவதுமில்லை மாறுபடுதுமில்லை.அவன் மரணமற்ற நித்திய ஜீவன்.தூக்கமற்ற
தூயவன். அவனது தன்மைகள், திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. படைப்புகளைப்படைப்பதற்கு
முன்னரே அவன்படைப்பாளன்خالق– என பெயர்பெற்றவன். அவனது தன்மைகளும்
திருநாமங்களும் மாற்றமடைவதில்லை. அவனது உள்ளமையும் அவனது தன்மைகளும் சிருஷ்டிகளின்
உள்ளமைக்கும் தன்மைகளுக்கும் எவ்விதத்திலும் ஒப்பாகமாட்டாது.அவன் படைப்புகளை படைப்பதற்குமுன்
எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்தபின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான்.
அவன் எல்லா வஸ்துக்கள்மீதும் சக்தி பெற்றவன்.சகலவிடயங்களையும் செய்வது அவனுக்கு மிக
இலகுவானது. அவன் எவ்வித தேவையுமற்றவன். அவனிடத்திலேயே அனைத்தும் தேவையாகின்றன. சிருஷ்டிகளைப்
படைக்கவேண்டிய எந்த ஒரு நிர்ப்பந்தமும் அவனுக்கில்லை.
சிருஷ்டிகளைப்படைத்து அவைகளுக்குரிய திட்டங்களை வகுத்துள்ளான்.
அவைகளைப்படைப்பதற்கு முன்னரே அவைகளின் சகல விடயங்களையும் அவன் நன்னறிந்தவனாக இருக்கின்றான்.அவனது
முன்னளப்பின் படியும் அவனது நாட்டத்தின்படியும் அனைத்தும் நடைபெறுகின்றன. அவன் நாடியது
நடைபெறுகின்றது. அவன் நாடாதது நடைபெறுவதில்லை.அவன் நாடியவர்களை நோவழிகாட்டுகின்றான்.
அவன்நாடியவர்களை வழிதவறச்செய்கின்றான்.அவனது நாட்டத்தை மாற்றியமைக்கவோ அவனது தீர்ப்பை
திருத்தியமைக்கவோ யாராலும் முடியாது. அவன் காலம் இடம்,திசை,சடம் எனும் கட்டுப்பாடுகளை விட்டும்
தூயவன்.
அவன் சடப்பொருளல்ல,அவன் ஆதாரமுமல்ல ஆதேயமுமல்ல.அவனுடன் எதுவும் சேர்வதுமில்லை அவனிலிருந்து
எதுவும் பிரிவதுமில்லை.அவன் அசைவதுமில்லை அமைதிபெறுவதுமில்லை. அவனில் ஏதும் அதிகரிப்பதுமில்லை
அவனிலிருந்து ஏதும் குறைவதுமில்லை.அவன் படைப்புகளில் வந்து இறங்கியிருப்பதுமில்லை.
படைப்புகளுடன் ஒன்றாகக் கலப்பதுமில்லை.அவனை சிந்தனைகள், பார்வைகள் சூழ்ந்துகொள்ளாது.
அவனை திரைகள் எதுவும் மறைக்காது.அவனில் மாத்திரமே எதிரான தன்மைகள் ஒன்று சேர்கின்றன.
அவனே முந்தியவன் அவனே பிந்தியவன் அவனே வெளியானவன் அவனே உள்ளானவன், அவன் சகல வஸ்துக்களையும் நன்கறிந்தவன்.அவர்கள்
இணைவைப்பதைவிட்டும் அவன் தூயவன்.
அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச்சமீபமாக இருக்கின்றான்.அவன்
அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாக இருக்கின்றான். அவன் சிருஷ்டிகளுக்கு
மாற்றமானவன். அவனுக்கு நிகராக எந்த வஸ்துவுமில்லை அவனே கேட்பவனாகவும் பார்ப்பவனாகவுமிருக்கின்றான்.
அவனைக்கொண்டே தவிர அணுவும் அசையாது.
அவன்தான் சகல சிருஷ்டிகளாகவும் தோற்றுகின்றான். அவன்தான் சகல
சிருஷ்டிகளாகவும் வெளியாகியிருக்கின்றான். அவன் மிகத்தெளிவாக வெளியாகித்தோற்றுவதால்
அவன் பார்வைகளைவிட்டும் மறைந்திருக்கின்றான். அதிக வெளிச்சம் பார்வைக்கு இருளாக தோற்றுவது
போல அவனது ஒளிப்பிளம்பின்தோற்றமே அவனை நம் கண்களுக்கு மறைக்கின்றதே தவிர அவனை மறைக்க
எந்த திரையாலும் முடியாது.உள்ளமையில் அல்லாஹ்வைத்தவிர யாருமில்லை, எதுவுமில்லை. அவன் மாத்திரமே
இருக்கின்றான்.அவன் சகல சிருஷ்டிகளையும் தனக்குத்தானாக சூழ்ந்திருக்கின்றான்.
الآ إنّهم
في مرية من لقاء ربّهم ألآإنه بكل شيئ محيط.( فصلت 54
)
அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.அவன் எல்லா வஸ்துக்களையும்
சூழ்ந்தவனாக இருக்கின்றான்.
(புஸ்ஸிலத் : 54)
அல்லாஹ் சிருஷ்டிகளாகத் தோற்றி காட்சியளிக்கும்போது அவனைக்காண்பதில் அவர்கள் சந்தேகம்
கொள்கின்றனர். அவனது உள்ளமை,உயிர்,அறிவு,சக்தி அனைத்தும் அவனது படைப்புகளில் வெளியாகியுள்ளது.வானத்திலும் பூமியிலுமுள்ள
எந்த ஒரு அணுவும் அவனது உள்ளமையை விட்டும் நீங்கியிருக்க முடியாது. அவன் சகல சிருஷ்டிகளையும்
தனக்குத்தானாக சூழ்ந்திருக்கின்றான்.
وَلِلَّهِ الْمَشْرِقُ
وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ
عَلِيمٌ (البقرة 115

)
கிழக்கும் மேற்க்கும் – இருண்டபிரதேசங்களும் ஒளிர்ந்த பிரதேசங்களும் அல்லாஹ்வுக்கே
சொந்தமானவை. நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் வெளியாகித்தோற்றுகின்றான். 
(அல் பகறஹ் : 115)
கிழக்கும் மேற்க்கும் – இருண்டபிரதேசங்களும் ஒளிர்ந்த பிரதேசங்களும்
– பூமி முழுவதும் – பிரபஞ்சம் அனைத்தும்  அல்லாஹ்வுக்கு
தனக்குத்தானான சொந்தமானவை. இந்த சொந்தம் ஆதி அந்தமற்ற சொந்தம் பூர்வீகமான சொந்தம் புதிதாக
ஏற்பட்ட சொந்மதல்ல. புதிதாக அல்லாஹ்வுக்கு எதுவும் சொந்தமாக முடியாது.
நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் வெளியாகித் தோற்றுகின்றான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments